Appam, Appam - Tamil

அக்டோபர் 27 – புதுப்பாட்டு!

“அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது” (வெளி. 14:3).

சீயோன் பர்வதத்திலே ஆட்டுக்குட்டியானவரோடு நின்றவர்கள் அனைவரும் இனிய மகிழ்ச்சி ததும்பும் பாடலைப் பாடினார்கள். அதை வேறு யாராலும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது. அது ஒரு ஆச்சரியமான பாடலாயிருந்தது. பூமிக்குரிய வாழ்க்கையை வெற்றியோடு முடித்தவர்கள் ஜெய கெம்பீரமாய்ப் புதிய பாட்டைப் பாடுகிறார்கள்.

பழைய ஏற்பாட்டிலே, சிவந்த சமுத்திரத்தைத் தாண்டி இஸ்ரவேலர் வந்தபோது, மோசேயும், மிரியாமும், இஸ்ரவேல் புத்திரரும் வெற்றி முழக்கமான ஒரு பாடலைப் பாடினார்கள். “கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்” (யாத். 15:1) என்று பாடினார்கள். சிவந்த சமுத்திரக்கரையிலே பாடுவதைப்பார்க்கிலும் சீயோன் மலையிலே கிறிஸ்துவோடு கை கோர்த்துப் பாடுவது எத்தனை மகிமையுள்ளதாய் இருக்கும்!

புதிய ஏற்பாடு, புதிய பாடல்களில்தான் ஆரம்பமாகிறது. தேவதூதர்கள் “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்” (லூக். 2:14) என்று வேதம் சொல்லுகிறது. கிறிஸ்துவின் பிறப்பின்போது, வானத்திலுள்ள பரமசேனையின் திரள் பாடினது. லூக்கா சுவிசேஷத்தில் எலிசபெத்தின் பாடல் உண்டு. மரியாளின் பாடல் உண்டு. சிம்சோனின் பாடல் துதி உண்டு! அன்னாள் தீர்க்கதரிசியின் கீதம் உண்டு.

பவுலையும் சீலாவையும், கொடுமையாக அடித்து சிறைச்சாலையிலே போட்டபோது, அங்கே அவர்கள் துயரத்தின் மத்தியிலும் பாடினார்கள். கர்த்தருக்காகப் பாடு அனுபவிப்பதும், சீயோனின் பாடலைப் பாடி மகிழ்வதும் ஆனந்த பாக்கிய அனுபவமாய் அவர்களுக்கு இருந்தது. அந்தப் பாடல் சிறைச்சாலைக்காரனை இரட்சிப்புக்குள் கொண்டுவருவதற்கு ஏதுவாக இருந்தது.

இஸ்ரவேலர் பாபிலோன் சிறையிருப்பில் சிக்கிக்கொண்டபோது, பாவத்தினால் ஏற்பட்ட அந்த வேதனை அவர்களுடைய உள்ளத்தைப் பிழிந்தது. “பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம். எங்களைச் சிறைபிடித்தவர்கள் …. மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்” (சங். 137:1,3). ஆனால் சிறையிருப்பிலே இஸ்ரவேலரால் பாட முடியவில்லை. “கர்த்தரின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?” (சங். 137:4) என்று சொல்லி அவர்கள் கலங்கினார்கள்.

ஆனால் நாமோ, அந்த சீயோன் பர்வதத்திலே ஜெயங்கொண்ட பரிசுத்தவான்களாய் நிற்கும்போது, உள்ளமானது மகிழ்ச்சியினால் பொங்கி, புதிய புதிய பாடல்கள் நீரூற்றிலிருந்து தண்ணீர் பொங்கி வருவதைப்போல வந்துகொண்டே இருக்கும்.

“ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் அவன் சங்கீதம் பாடக்கடவன்.” சீயோன் மகா மகிழ்ச்சியான இடம். “வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது” (சங். 48:2) என்று சங்கீதக்காரர் சொல்லுகிறார்.

நினைவிற்கு:- “சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக. சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்” (சங். 48:11,12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.