அக்டோபர் 11 – செட்டைகளின்மேல்!
“அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டு போகிறதுபோல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்” (உபா. 32:11,12).
தாய்க்கழுகு தன் செட்டைகளை விரிக்கும்போது, சில குஞ்சுகள் தாயின்மேலுள்ள அன்பினால் தானாகவே வந்து செட்டைகளின்மேல் ஏறிவிடும். ஆனால் சில குஞ்சுகளையோ தாய்க் கழுகு கட்டாயப்படுத்தி இழுக்கக்கூடும்.
நீச்சல் கற்றுக்கொடுக்கிறவர்கள் சிறுவர்களை தண்ணீரில் குதிக்கச் சொல்லுவார்கள். சிறுவர்களும் தங்களுக்கு இருக்கிற ஆர்வத்தினால் குதித்து கொஞ்ச நேரத்தில் நீச்சலடிக்கக் கற்றுக்கொள்வார்கள். வேறு சிலர் தண்ணீரைப் பார்த்ததும் பயந்து தயங்கி நிற்கும்போது, மற்றவர்கள் கட்டாயப்படுத்தி தண்ணீரிலே தள்ளி விடுவார்கள். எப்படியோ, அவர்கள் நீச்சல் கற்றுக்கொள்ளவேண்டும்.
நானூற்று முப்பது வருஷங்கள் எகிப்தாகிய கூட்டிலே வாழ்ந்துவிட்ட இஸ்ரவேலருக்காக கர்த்தர் தம்முடைய செட்டைகளை விரித்தார். பலருக்கு எகிப்தை விட்டு வர பிரியமில்லை. ஆகவே கர்த்தர் ஒருபக்கம் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்.
மறுபக்கம் பத்து வாதைகளை அனுப்பினார். முடிவில் இஸ்ரவேலரை அன்போடு எகிப்தைவிட்டு வெளியே கொண்டுவந்தார். சிவந்தசமுத்திரம் அற்புதமாய் அவர்களுக்கு வழிவிட்டது. நாற்பது வருடங்கள் வனாந்தரத்திலே கர்த்தருடைய செய்கைகளைக் கண்டவாறு அவரோடு நடந்தார்கள்.
அதை நினைவுபடுத்தி கர்த்தர் சொன்னார், “நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்” (யாத். 19:4).
தாயின் செட்டைகளில் ஏறியிருக்கும் கழுகுக்குஞ்சுகளுக்குத் தாங்கமுடியாத மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கக்கூடும். கிணற்றுத் தவளைகளைப்போல இதுவரையிலும் கூட்டிலேயே இருந்து, அதுதான் உலகம் என்று எண்ணிக்கொண்டிருந்த கழுகுக் குஞ்சுகள் இப்பொழுது உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றன.
அதன் பின்பு ஒவ்வொரு குஞ்சாக தன்னுடைய செட்டைகளில் ஏற்றிச் சென்று, ஆகாயத்தின் உயரத்திலே திடீரென்று அந்தத் தாய்ப் பறவை தன் செட்டைகளை சுருக்கிக்கொண்டு குஞ்சை ஆகாயத்தில் விட்டுவிடுகிறது. இமைப்பொழுதில் இது நடந்துவிட்டதால் அந்த குஞ்சானது மிகுந்த நடுக்கத்தோடு தன் செட்டைகளை வேகமாய் அடித்துப் பறக்க முயற்சிக்கிறது. தரையிலே விழுந்து மடிந்துவிடுவோமோ என்ற பயம் மறுபக்கம் அதை வாட்டுகிறது.
ஆனாலும் செட்டைகளில் போதிய பெலன் இல்லாதபடியால் அவை கீழே நோக்கி வேகமாய் விழுகிறதைப்போல வருகின்றன. ஆனால் அடுத்த வினாடி தாய்க் கழுகு மிக வேகமாய்ப் பறந்து தன்னுடைய குஞ்சுகளுக்குக் கீழே தன்னுடைய செட்டைகளை விரித்து, அந்தக் குஞ்சை தாங்கிக்கொள்ளுகிறது. அப்படி பலமுறை செய்து முடிவிலே, அந்தக் குஞ்சுகள் அழகாக பறக்கக் கற்றுக்கொண்டு பின்பு தாயைப்போல அருமையாய்ப் பறந்து செல்லுகின்றன.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய செட்டைகளின்மேல் நீங்கள் அமர்ந்திருக்கும் மேன்மையான அனுபவங்களை வாஞ்சிப்பீர்களாக!
நினைவிற்கு:- “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசா. 40:31).