அக்டோபர் 04 – தேடுகிற காலம்!
“நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்புஅறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது” (ஓசி. 10:12).
மேலே சொன்ன வசனத்தில் ஓசியா தீர்க்கதரிசி ‘இது பகற்காலம் மட்டுமல்ல, கர்த்தரைத் தேடுகிற காலமாய் இருக்கிறது’ என்று குறிப்பிடுகிறார். கர்த்தரை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் தேடுங்கள். உபவாசத்தோடும், ஜெபத்தோடும் தேடுங்கள். “தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தேடுகிறவன் கண்டடைகிறான்” (மத். 7:7,8) என்று வேதம் சொல்லுகிறது. இந்த வசனத்தின் வேறு சில மொழிபெயர்ப்புகள் கர்த்தரைத் தேடிக்கொண்டே இருங்கள். அப்பொழுது கண்டடைவீர்கள் என்று சொல்லுகின்றன.
சூலமித்தி சொல்லுகிறாள், “இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை. நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்” (உன். 3:1,2) முடிவில் என் ஆத்தும நேசரைக் கண்டபோது, “என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்” (உன். 3:4).
ஒவ்வொருநாளும் ஜெபநேரத்தில் கர்த்தருடைய முகத்தைத் தேடுங்கள். அவர் உங்களோடு என்ன பேசுவாரோ என்று அறிய ஆவலோடு இருங்கள். வேதம் சொல்லுகிறது, “நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்” (2 நாளா. 15:2).
ஒருபக்கம் நாம் அவரைத் தேடுகிறோம். மறுபக்கத்தில் அவரும் நம்மைத் தேடுகிறார். அவர் மிகுந்த அன்போடும் பாசத்தோடும் நம்மைத் தேடுவதற்காக பரலோகத்தைத் துறந்து பூமிக்கு இறங்கி வந்தார். கல்லிலும், முள்ளிலும் நடந்து அவர் நம்மைத் தேடுகிறார். நம்மைத் தேடுகிற அன்புக்காகவே லூக்கா 15-ம் அதிகாரத்தை அவர் எழுதி வைத்தார்.
காணாமற்போன ஆட்டைத் தேடிக் கண்டுபிடிக்கிற நல்ல மேய்ப்பனின் உவமையையும், காணாமல் போன வெள்ளிக்காசை தேடிக்கண்டுபிடிக்கிற ஸ்திரீயின் உவமையையும், காணாமல்போன கெட்ட குமாரனைத் தேடி ஆவலோடு காத்திருக்கிற தகப்பனின் உவமையையும் அதில் நாம் வாசிக்கிறோம்.
உங்களைத் தேடுகிற கர்த்தரை நீங்களும் தேடவேண்டும். உங்கள்மேல் அன்பு செலுத்துகிற கர்த்தரிடம் நீங்களும் அன்பு செலுத்தவேண்டும். இது கர்த்தரை ஊக்கமாகத் தேடுகிற ஒரு காலமாய் இருக்கிறது.
பாருங்கள், எறும்புகள் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொண்டு இரை தேடவேண்டிய காலத்தில் இரைதேடி தன் உணவை மழைக்காலத்திற்கு முன் ஆயத்தம்பண்ணி வைத்துக்கொள்கின்றன. இதனால் அவைகளால் கவலையின்றி மகிழ்ச்சியோடு மழைக்காலத்தைச் சந்திக்கமுடிகிறது.
அதுபோல, வசனம் கிடைக்காத பஞ்சகாலம் வருவதற்கு முன்பு ஆவியும், ஜீவனுமாய் இருக்கிற கர்த்தருடைய வசனங்களை வாசித்து தியானியுங்கள். நல்ல ஆவிக்குரிய புத்தகங்களை வாசித்துப் பயன்பெறுங்கள். ஆம், இது கர்த்தரையும், அவருடைய வார்த்தைகளையும் தேடவேண்டிய ஒரு காலம்.
நினைவிற்கு:- “கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்” (நீதி. 10:5)