மார்ச் 23 – அறிந்திருக்கிறார்!
“எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்” (யாத் 3:7).
உங்களுடைய துயரம், துக்கங்களையெல்லாம் கர்த்தர் அறிந்திருக்கிறார். நீங்கள் நடக்கிற பாதையை ஒருவேளை உங்கள் சொந்த தகப்பன் அறிந்துகொள்ளாமலிருக்கலாம். உங்களை பெற்றெடுத்த தாயேகூட புரிந்துகொள்ளாமலிருக்கலாம், ஒருவேளை இந்த முழு உலகமே உங்களை அறிந்து கொள்ளாமலிருந்தாலும் கர்த்தர் அன்போடு சொல்லுகிறார்: “என் மகனே, என் மகளே, நான் உன்னை அறிந்திருக்கிறேன்.”
இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைத்தனத்திலிருந்தபோது, தாங்க முடியாத உபத்திரவமடைந்து கூக்குரலிட்டார்கள். அந்த கூக்குரலின் சத்தம் ஆண்டவருடைய இருதயத்தை உருக்கிற்று. கர்த்தர், உடனே மோசேயை எழுப்பி, எகிப்திலே பலத்த அற்புதங்களைச் செய்தார். எகிப்து தேசம் முழுவதிலும் பலத்த சங்காரத்தை ஏற்படுத்தி தலைச்சன்களையெல்லாம் அழித்தார். மட்டுமல்ல, இஸ்ரவேலரைக் கொண்டு எகிப்தியரைக் கொள்ளையிடும்படி செய்தார். அவர்கள் ஜெயத்தோடு தேனும் பாலும் ஓடுகிற கானானை நோக்கி நடந்தார்கள்.
இன்றைக்கு ஒரு வேளை உங்களுடைய அலுவலகத்திலே பல ஆளோட்டிகளின் சவுக்குகளுக்கு கீழே அடிமைகளாய் இருக்கிறீர்களா? சவுக்குகளைப் பார்க்கிலும் கொடிதான வசைச் சொற்களும், தவறான குற்றச்சாட்டுகளும் உண்டல்லவா? வேதம் சொல்லுகிறது, “தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்” (யாத். 2:25). அந்த தேவன் உங்களை அறிந்திருக்கிறார்.
வேதம் சொல்லுகிறது, “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேதுரு 5:7). அவர் உங்கள்மேல் கரிசனையுள்ளவர். அவர் உங்களை விசாரிக்கிறவர். உங்களுக்காக கவலைப்படுகிறவர். நீங்கள் அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருப்பதினாலே நிச்சயமாகவே ஏற்ற காலத்தில் அவர் உங்களை உயர்த்துவார்.
எங்களுடைய அலுவலகத்துக்கு வருகிற கடிதங்களில் தேவனுடைய பிள்ளைகள் தங்களுடைய நெருக்கங்களையும், பாடுகளையும், உபத்திரவங்களையும் விவரித்துக் கண்ணீரோடு எழுதுகிறார்கள். நாங்கள் அக்கடிதங்களைக் கருத்தாய் வாசித்து அவர்களது இன்னல்களைத் தெரிந்துகொள்ளுவதைப் பார்க்கிலும் மிகவும் அதிகமாய் கர்த்தர் அவற்றை அறிந்திருக்கிறார். கண்ணீரின் ஜெபத்திற்கு நிச்சயமாகவே பதில் உண்டு.
தேவபிள்ளைகளே, இயேசு கிறிஸ்து என்ற உறுதியான அஸ்திபாரத்தின் மேல் நீங்கள் நிலைநிற்கிறீர்கள். ஆகவே கலங்காதேயுங்கள். உங்களைக் கரிசனையோடு வழிநடத்துகிற தேவன் உங்களுக்காக புதிய பாதையை திறந்தருளுவார். அவர் உங்கள் இன்னல்களையெல்லாம் அறிந்திருக்கிறவர்.
நினைவிற்கு:- “ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது” (2 தீமோ. 2:19).