AppamAppam - Tamil

அக்டோபர் 18 – ஜீவனும், பரிபூரணமும்!

“நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10).

இன்று உலகத்திலே இரண்டு பெரிய வல்லமைகள் ஒன்றுக்கொன்று எதிராக கிரியை செய்துகொண்டிருக்கின்றன. ஒன்று, தெய்வீக வல்லமை, அடுத்தது, சாத்தானின் வல்லமை. சாத்தானைத் திருடன் என்று வேதம் சொல்லுகிறது. இயேசு சொன்னார், “திருடன் திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்” (யோவான் 10:10).

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவிலே ஒரு போதகர் மிக வல்லமையாய் ஊழியம் செய்து வந்தார். அப்போது அந்தப் பட்டணத்திலே ஒரு பயங்கரமான வாதை நோய் வந்து அநேகம் பேரை கொன்றுபோட்டது. சரியான மருந்து கண்டு பிடிக்க முடியவில்லை. டாக்டர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்தப் போதகருடைய சபையிலே மாத்திரம் நாற்பதுபேர் மரித்துப் போனார்கள். அப்போது போதகருடைய உள்ளம் தடுமாறியது. ‘ஆண்டவரே, என் சபை விசுவாசிகளுக்கு இந்த நோயைக் கொடுத்து அவர்களை முற்றிலும் கொன்று குவித்துவிடப் போகிறீரோ? ஏன் அதைச் செய்கிறீர்?’ என்று கதறிக் கேட்டார்.

அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், ‘இயேசுகிறிஸ்து எப்பொழுதுமே நன்மை செய்கிறவராகவே சுற்றித் திரிந்தார். நோயுற்றோரைக் குணமாக்கினார். பிசாசின் பிடியில் சிக்கின யாவரையும் விடுவிக்கிறவராய் இருந்தார்’ (அப். 10:38) என்பதையும், ‘அவர் ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தார்’ என்ற வசனத்தையும் அவருக்கு வெளிப்படுத்திக் காண்பித்தார்.

இந்த வியாதிக்கும், மரணத்துக்கும் காரணம் சாத்தானே என்று உணர்த்தியபோது, போதகரின் கண்கள் திறந்தன. ஆவியிலே வைராக்கியம் கொண்டார். அவர் உறுதியாக நின்று, சாத்தானுடைய வல்லமையை எதிர்க்கத் துவங்கினார். மரணத்தின் அதிபதியான பிசாசை இயேசு மரணத்தினால் ஜெயித்ததை வாக்குத்தத்தமாக பற்றிக்கொண்டு போராட ஆரம்பித்தார்.

அவர் ஜெபிக்க ஜெபிக்க அந்த வாதை படிப்படியாகக் குறைந்தது. மரணம் நின்றது என்றாலும் அவர் ஜெபத்தை நிறுத்தவில்லை. ‘சாத்தானே என் மந்தையின் ஆடுகளைத் திருடிக்கொண்டு போக உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?’ என்றுச் சொல்லி தன் சபை விசுவாசிகளை கிறிஸ்துவினுடைய அக்கினி மதிலுக்குள்ளே கொண்டு வந்தார். அதன் பின்பு அவருடைய விசுவாசிகள் கர்த்தருடைய வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொண்டு ஜெபித்து வெற்றி கண்டனர். மரண வாதை நின்று போயிற்று.

வியாதியோ, துன்பமோ, வறுமையோ, கடன் பிரச்சனையோ, போராட்டமோ வரும்போது, உங்களை நொந்துகொள்ளாதிருங்கள். கர்த்தரைக் குற்றப்படுத்தாதிருங்கள். கர்த்தருடைய வாக்குத்தத்தத்தோடு, சாத்தான் எய்யும் அக்கினியாஸ்திரங்களை அவித்துப் போடும்படி விசுவாசம் என்னும் கேடகத்தோடு சாத்தானை எதிர்த்து நில்லுங்கள். தேவபிள்ளைகளே, பயப்படாதேயுங்கள், கர்த்தர் பெரியவராய் உங்கள் நடுவிலே நிற்கிறார். அவர் உங்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தவர்.

நினைவிற்கு:- “அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்” (சங். 91:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.