அக்டோபர் 16 – விசுவாசமும், தெய்வீக சுகமும்!
“விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்” (யாக். 5:15).
கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் விசுவாசம் இணைந்திருக்கிறது. விசுவாசமில்லாமல் தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் எல்லாரும், எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இருக்கும்படி விரும்புகிறார். ஆனால் வஞ்சக சாத்தானோ வியாதிகளையும், நோய்களையும், பலவீனங்களையும் கொண்டு வருகிறான். இயேசு சொன்னார், “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்” (யோவான் 10:10).
கிறிஸ்து ஜீவனைக் கொடுக்கவும், அந்த ஜீவன் பரிபூரணப்படவும் வந்தார். நீங்கள் கிறிஸ்துவின் ஜீவனுள்ளவர்களாய், ஆரோக்கியமுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்பதற்காகவே, அவர் உங்களுடைய நோய்களையெல்லாம் குணமாக்குகிறார். இயேசு சுகப்படுத்துவார் என்று விசுவாசித்து ஒரு பிணியாளி ஜெபிக்கும்போது, விசுவாசமுள்ள அந்த ஜெபம் அவரை குணமாக்குகிறது.
நீங்கள் வியாதிகள் நீங்கி குணமாக எதை விசுவாசிக்க வேண்டும்? இயேசு என் பாவத்துக்கு மட்டும் பரிகாரி அல்ல, சரீரத்திற்கும் பரிகாரி என்பதை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். நோய்களைக் குணமாக்குவேன் என்று அவர் உடன்படிக்கைச் செய்திருக்கிறாரே.
“நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” (யாத். 15:26) என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார். அவர் உங்களுடைய நோய்களைச் சிலுவையில் சுமந்து தீர்த்திருக்கிறார்.
நீங்கள் விசுவாசத்தோடு உங்களுக்காக தழும்புகளை ஏற்றுக்கொண்டவரை நோக்கிப் பாருங்கள். “என் ஆண்டவரே, என் வியாதிகளை எல்லாம் நீர் சிலுவையில் சுமந்தீரே, என்னுடைய பலவீனங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டீரே, எனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணும்” என்று கேளுங்கள். அவர் நிச்சயமாகவே உங்களுக்குப் பூரண விடுதலையையும், பூரண ஆரோக்கியத்தையும் தந்தருளுவார். அவர் உரைத்த ஆசீர்வாதமான வார்த்தைகளில் ஒன்றாகிலும் தவறிப்போவதில்லை.
ஒரு முறை அப். பவுல் லீஸ்திரா வந்தபோது, அங்கு ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் விளங்காதவனாய் உட்கார்ந்து பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு, நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்துநில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னார். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான் (அப். 14:8-10).
பாருங்கள்! அவனுக்குள் விசுவாசம் இருக்கிறது என்று தேவ ஊழியர் கண்டார். அந்த விசுவாசத்தின் மூலமாய் குணமானான். விசுவாசமே தெய்வீக சுகத்தைக் கொண்டு வருகிறது. தேவபிள்ளைகளே, விசுவாசித்து அற்புதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 யோவான் 1:1).