ஆகஸ்ட் 24 – திறப்பார்!
“ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தைத் திறப்பார்” (உபா. 28:12).
உபாகமம் 28-ம் அதிகாரத்தின் முதல் 14 வசனங்கள், ஆசீர்வாதங்களால் நிரம்பிய ஒரு வேதப்பகுதி ஆகும். கர்த்தருடைய சத்தத்திற்கு உண்மையாய் செவிக்கொடுக்கும்போது, அந்த ஆசீர்வாதங்களெல்லாம் உங்களுடைய வாழ்க்கையில் வந்து பலிக்கும். அதிலுள்ள முக்கியமான ஒரு ஆசீர்வாதம் “கர்த்தர் தம்முடைய நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தைத் திறப்பார்!” என்பதாகும்.
நீங்கள் மிகவும் தயாள குணமுடைய ஒரு செல்வந்தருடைய வீட்டிற்கு உதவிகோரி செல்லுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் அதிகபட்சமாக உங்களுக்கு பண உதவி செய்வார். இன்னும் அதிக மனதுருக்கம் இருக்குமானால் பொன், வெள்ளியும்கூட தருவார்.
ஆனால் உலகத்திலுள்ள எல்லா தயாள பிரபுக்களைப் பார்க்கிலும், மேலான தயாள பிரபுவும், இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவரும், தன்னண்டை வருகிற ஒருவரையும் புறம்பே தள்ளாதவருமாகிய இயேசுகிறிஸ்து, உங்களுக்குத் தமது நல்ல பொக்கிஷமாகிய வானத்தைத் திறந்தருளுவார். அப்பொழுது ஏற்றகாலத்திலே உங்களுடைய தேசத்திலே மழை பெயும். நீங்கள் கையிட்டு செய்யும் எல்லா வேலைகளும் ஆசீர்வதிக்கப்படும்.
கர்த்தர் உங்களுக்கு வானத்தைத் திறக்கவேண்டுமென்றால், நீங்களும் ஏழைகள் கூக்குரலிடும்போது, அவர்களுக்கு உங்கள் இருதயத்தை திறக்க வேண்டும். வறுமையிலே, வேதனையிலே வாழுகிற திக்கற்றவர்களுக்கு உங்களுடைய கையை விரிவாய்த் திறந்து கொடுக்க வேண்டும். நீங்கள் ஏழையின் கூக்குரலுக்கு செவியை அடைத்துக் கொண்டால், நீங்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது, அவரும் தமது செவியை அடைத்துக்கொள்வார்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒரு ஊழியக்காரர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருந்த பேரின்பப் பெருவிழாவிற்கு, அவரை ஜெபிப்பதற்கென்று அழைத்துச் சென்றார்கள். ஆனால், அங்கு அவர் நிலை மேலும் மோசமாகிவிடவே, அவசரமாக அவரை மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல ஒரு கார் வேண்டி அவரது உறவினர்கள் அலைந்துக்கொண்டிருந்தனர். ஒரு செல்வந்தரிடம் உதவி கேட்ட போது அவர் தயக்கத்துடன், வேண்டா வெறுப்பாக தன் காரைத் தர சம்மதித்தார். ஆனால், அவர் மனைவியோ தன் கணவரைக் கடிந்து கொண்டதுடன் காரைத் தர உறுதியாக மறுத்துவிட்டார்.
மனைவியினுடைய உள்ளம் அடைபட்டதினால் கணவனுடைய விருப்பமும் அடைபட்டது. காரின் கதவுகளும் மூடப்பட்டன. கர்த்தர் இப்படிப்பட்டவர்களுக்கு எப்படி வானத்தின் பலகணிகளைத் திறப்பார்? தேவபிள்ளைகளே, கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும். இரட்டிப்பாய்த் தந்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
நினைவிற்கு:- “இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக” (உபா. 29:9).