AppamAppam - Tamil

ஆகஸ்ட் 21 – தேசத்தை சுதந்தரிப்போம்!

“நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்றான்” (எண். 13:30).

மோசே வேவு பார்க்க பன்னிரண்டு பேரை அனுப்புகிறதை எண்ணாகமம் 13-ம் அதிகாரத்திலே காணலாம். அவர்கள் கொண்டுவந்த செய்தி, இன்றைக்கு ஆவிக்குரிய உலகத்திலே நமக்கு கிடைக்கிற செய்திகளுக்கு ஒப்பாயிருக்கிறது. பன்னிரண்டு பேரில் பத்துபேர் துர்ச்செய்தியைக் கொண்டு வந்தார்கள். அந்த செய்தி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானை சுதந்தரித்துக் கொள்வது கடினமான காரியம் என்பதாகும். இன்றைக்கும் ஆவிக்குரிய உலகில் அநேகம்பேர் தேசத்தில் எழுப்புதல் வருவது கூடாத காரியமென்றும், சபைகள் உயிர்மீட்சி அடைவது முடியாத காரியம் என்றும் அவிசுவாசத்தோடு தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில், மற்ற இரண்டு பேரைக் குறித்து வேதத்தில் வாசித்துப் பாருங்கள். அவர்கள்தான் காலேப்பும், யோசுவாவும். அவர்கள் தேவனுடைய ஆவியை உடையவர்கள். தேவனுடைய பெலத்தில் சார்ந்திருப்பவர்களுக்கு, “முடியாது” என்று எதுவுமே கிடையாது. அவர்கள் சொன்னது என்ன தெரியுமா? “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்” (எண்.13:30).

இன்றைக்கு கர்த்தர் உங்களை இந்தியாவில் வைத்திருக்கிறார். உங்களுடைய விசுவாசம் எப்படியிருக்கிறது? முடியாது என்று சொல்லுகிறதாய் இருக்கிறதா அல்லது முடியும் என்று சொல்லுகிறதாய் இருக்கிறதா? துர்ச்செய்தியைக் கொண்டு வந்த பத்துபேரோடு நிற்கிறீர்களா? அல்லது காலேப், யோசுவாவோடு நிற்கிறீர்களா?

கர்த்தர் பரிசுத்த ஆவியை வாக்குத்தத்தம் பண்ணினபோது, அதை வெறும் எருசலேமுக்கும், யூதேயாவுக்கும் மாத்திரம் வாக்குப் பண்ணவில்லை. “பரிசுத்த ஆவி உங்களில் வரும்போது, நீங்கள் பெலனடைந்து பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” (அப். 1:8) என்றார். பூமியின் கடைசி பரியந்தமும் என்று சொல்லும்போது அதில் இந்தியாவும் உண்டல்லவா? இயேசுகிறிஸ்துவோடு கிராமங்களிலும், பட்டணங்களிலும் நடந்து திரியுங்கள். சுவிசேஷத்தை முழு பெலத்தோடு பிரசங்கியுங்கள். கிறிஸ்து உங்கள் மூலமாய் தேசத்தை சந்திக்க விரும்புகிறார்.

அப். பவுல், “உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மை பாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம்” (2 கொரி. 10:16) என்று சொல்லுகிறார்.

தேவபிள்ளைகளே, நம்முடைய தேசம் இன்னும் எவ்வளவு காலம் காரிருளிலே மூழ்கிக் கிடக்கும்? எவ்வளவு காலம் நம்முடைய மக்கள் காரிருளுக்கு அடிமைகளாகி தவிப்பார்கள்? எவ்வளவு காலம் நம்முடைய தேசத்தின் மக்கள் தங்கள் மேய்ப்பரும், மீட்பருமாகிய கிறிஸ்துவை அறியாமல் இருப்பார்கள்? ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த வேண்டாமா? நீங்கள் தேசத்தை கர்த்தருக்காக சுதந்தரிக்க முற்பட வேண்டாமா?

நினைவிற்கு:- “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.