AppamAppam - Tamil

ஜூலை 17 – தானியேலின் உண்மை!

“தானியேல் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை” (தானி. 6:4).

நம் கர்த்தர் உண்மையுள்ளவர். அவரை நேசிக்கிற எல்லா பக்தர்களும் உண்மையுள்ளவர்களாகவே காணப்படுகிறார்கள். வேதத்தில் உண்மையுள்ள அநேக பரிசுத்தவான்களுடைய வாழ்க்கை வரலாற்றை நாம் தியானித்து வருகிறோம். இன்று தானியேலைக் குறித்து தியானிப்போம்.

தானியேலிடம் குற்றம் கண்டுபிடிக்க ஒரு கூட்டம் சுற்றி சுற்றி வந்தது. எரிச்சலின் ஆவிகளோடு கொடுமையானவர்கள் சீறிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. வேதம் சொல்லுகிறது, பிரதானிகளும் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது (தானி. 6:4).

சாத்தானுடைய பெயர்களில் ஒன்று குற்றம் சுமத்தும் பொருட்டு குற்றஞ்சாட்டுகிறவன் என்பதாகும் (வெளி. 12:10). ஆனால் தானியேலோ கர்த்தருக்கு முன்பாகவும், மனுஷருக்கு முன்பாகவும், ராஜாவுக்கு முன்பாகவும் உண்மையுள்ளவராய் காணப்பட்டார்.

கர்த்தருடைய வாக்குத்தத்தம் என்ன? ‘நீ கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்’ (மத். 25:23) என்பதே. சிறையிருப்பிலே பாபிலோனுக்கு வந்த தானியேலின் உண்மையைக் கர்த்தர் கண்டார். ராஜாவின் போஜனத்தினாலும், திராட்சரசத்தினாலும் தன்னை தீட்டுப்படுத்திக்கொள்வதில்லை என்ற உண்மையான உறுதிப்பாட்டைக் கண்டார். ஆகவே அநேகத்தின் மேல் அதிகாரியாக்கினார். பல ராஜாக்கள் வந்தார்கள், மறைந்தும் போனார்கள். ஆனால் தானியேலோ மேலும் மேலும் உயர்த்தப்பட்டு மேன்மையான ஸ்தானத்திற்கு கடந்து வந்தார்.

தேவபிள்ளைகளே, தானியேலைப் போல உண்மையுள்ளவர்களாய் இருப்பீர்களா? “உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” (2 நாளா. 16:9). தானியேலின் உண்மையை ராஜாவும்கூட உணர்ந்து கொண்டார். “தானியேலே, தேவனுடைய தாசனே” என்று அழைத்து, “நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னை சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா?” என்று கேட்டார்.

அதற்கு தானியேலின் பதில் என்ன தெரியுமா? “ராஜாவே, நீர் என்றும் வாழ்க. சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றார்” (தானி. 6:21,22).

“உண்மை” என்பது கிறிஸ்தவ ஜீவியத்தில் ஒரு முக்கியமான அம்சமாகும். உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர் என்று தாவீது எழுதுகிறார் (சங். 51:6). நீங்கள் கர்த்தருக்கும், ஜனங்களுக்கும் மத்தியிலே உண்மையுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்போது, கர்த்தருடைய நாமம் மகிமைப்படும். உங்களுடைய காரியம் ஜெயமாயிருக்கும்.

நினைவிற்கு:- “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்” (நீதி. 28:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.