மார்ச் 27 – இணைந்து ஜெபிக்கிறார்!
“அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோமர் 8:26).
ஆவியானவர் உங்களுக்கு எத்தனை அருமையான நண்பராயிருக்கிறார்! உங்களுடைய ஜெபங்களையெல்லாம் கேட்டு பரலோகத்திற்கு அவற்றை எடுத்துச்சென்று, பிதாவினுடைய கரங்களில் இருந்து பதிலையும் பெற்றுக்கொண்டு வருகிறார்.
நீங்கள் தனிப்பட்ட முறையில் எந்த ராக்கெட்டிலும் பரலோகத்திற்குப்போய் தேவனிடத்தில் உங்களுடைய காரியங்களைச் சொல்லிவிட்டுத் திரும்பமுடியாது. ஆனால், உங்களுடைய சிறந்த நேசராகிய ஆவியானவர் உங்களுக்காகப் பரலோகத்திற்கு ஏறி, வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார்.
பழைய ஏற்பாட்டில், ஜெபத்தை தேவதூதர்கள் தேவ சமுகத்திற்கு கொண்டுசென்றார்கள். ஜெபம் தூபமாக கர்த்தருக்கு முன்பாக ஏறெடுக்கப்பட்டது. யாக்கோபின் ஏணியின் வழியாக தேவதூதர்கள் பரலோகத்திற்கு ஏறுகிறவர்களாகவும், இறங்குகிறவர்களாகவும் இருந்தார்கள். ஆனால், புதிய ஏற்பாட்டிலோ உங்களுடைய ஜெபங்களை ஆவியானவரே கொண்டு செல்லுகிறார்.
அநேகர் பரிசுத்த ஆவியானவரின் நன்மையை உணருவதில்லை. அவர் தங்களுக்குக் கிடைத்திருக்கிறது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று சிந்தித்துப் பார்ப்பதுமில்லை. ஒருவேளை இதுவரையிலும் பரிசுத்த ஆவியானவரை நீங்கள் பெற்றுக்கொள்ளாமலிருந்தால் கண்ணீரோடுகூட கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.
வேதம் சொல்லுகிறது, “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (லூக். 11:13).
“பால் ராப்சன்” என்ற நீக்ரோ பாடகர் ஒருவர் இருந்தார். ஒருமுறை அவர் ஒரு பெரிய அரங்கில் பாடல்களைப் பாடும்படி வந்திருந்தார். அவர் மிகவும் அன்புள்ளவர்; மிகவும் உற்சாகமுள்ளவர்; பாடலில் மக்களை கவருகிறவர். அவர் ஒரு பாடலில் “உங்கள் கரங்களை எனக்குக் கொடுங்கள். என் கைகளைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி மிக உருக்கமாக பாடினார்.
உள்ளத்தை தொட்டு எழுப்பக்கூடிய அந்த பாடலை அவர் பாடிக்கொண்டே கரங்களை நீட்டியபோது, கூட்டத்திலுள்ள அத்தனைபேரும் தங்களை அறியாமலேயே மகிழ்ச்சியோடு தங்கள் கரங்களை அவருக்கு நேராக நீட்டிக்கொடுத்தார்கள். இதைப்போலத்தான் கர்த்தர் உங்களுக்கு நேராக தம்முடைய கரத்தை நீட்டுகிறார். நான் உங்களுக்காக பரிந்துபேச விரும்புகிறேன். உங்களைப் பரிசுத்தத்தின் பாதையிலே நடத்த விரும்புகிறேன் என்று சொல்லி தம் கரத்தை நீட்டுகிறார்.
தேவபிள்ளைகளே, அவர் பிடித்துக்கொள்ளும்படி உங்கள் வலது கரத்தை அவர்வசம் கொடுப்பீர்களா? ஆவியானவரே எனக்குள்ளே வாசம் செய்யும் என்று அழைப்பீர்களா?
நினைவிற்கு:- “நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்” (யோவேல் 2:28).