ஜனவரி 22 – பூரண பெலன்!
“என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரி. 12:9).
நீங்கள் பெலத்தில் பூரணப்பட்டவர்களாய் இருக்கும்படி அழைக்கப்பட்டவர்கள். ஆகவே நீங்கள் பெலன்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13) என்று சொல்லி பெலன் கொள்ளுவீர்களாக.
வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பெலன் கொண்டு, கர்த்தரைத் துதித்து மகிழ்ந்தவர் தாவீது. அவர் எழுதுகிறார், “கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்” (சங். 118:14). நீங்கள் பெலவீனன் என்றோ, அனாதை என்றோ, படிப்பறிவில்லாதவன் என்றோ ஒருபோதும் எண்ணி சோர்ந்துபோகாதேயுங்கள். வேதம் சொல்லுகிறது, “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்” (1 கொரி. 1:27).
கர்த்தர் உங்களைத் தெரிந்தெடுத்து பரலோக பெலத்தால் நிரப்பியிருக்கிறார். தாவீது சொல்லுகிறார், “யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர். உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” (2 சாமு. 22:40, 30).
இஸ்ரவேல் ஜனங்களில் பெலவீனமானவர்கள் ஒருவரும் இருந்ததில்லை. அவர்களை வழிநடத்தின மோசேக்கு நூற்றிருபது வயதாகியும் அவருடைய கண்கள் மங்கவோ, கால்கள் தள்ளாடவோ இல்லை. காலேப்புக்கு எண்பத்தைந்து வயதான போதிலும் அவருடைய பெலன் சிறிதும் குறுகவில்லை. அவர் சொல்லுகிறார், ‘யுத்தம் செய்வதற்கு எனக்கு அப்பொழுதிருந்த பெலன் இப்பொழுதும் இருக்கிறது. நான் மலைநாட்டை சென்று பிடிக்கப் போகிறேன் என்றார்’ (யோசுவா 14:7-12).
முதலாவது, இரட்சிப்பிலே உங்களுக்குப் பெலனுண்டு. இரட்சிக்கப்பட்டதுமே கர்த்தர் உங்களோடிருக்கிறதையும், முழுப் பரலோகமும் உங்கள் பட்சத்திலிருக்கிறதையும் உணருவீர்கள். “ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே” (சங். 140:7) என்று தாவீது மனம் குளிர அழைத்தார்.
இரண்டாவது, வசனத்திலே உங்களுக்குப் பெலனுண்டு. “சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்… எங்களை விளங்கப்பண்ணுகிறோம்” (2 கொரி. 6:7, 10). தேவ வசனமே ஆவியின் பட்டயம் (எபே. 6:17). அது அரண்களை நிர்மூலமாக்குவதற்கு தேவபெலனுள்ளதாய் இருக்கிறது (2 கொரி. 10:4).
மூன்றாவது, பரிசுத்தாவியிலே உங்களுக்குப் பெலனுண்டு. அப். பவுல் “பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு” (ரோமர் 15:13) என்று எழுதுகிறார். தேவபிள்ளைகளே, வாருங்கள். பெலத்தில் பூரணப்படுவோம்.
நினைவிற்கு:- “அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்” (சங். 84:7).