AppamAppam - Tamil

நவம்பர் 19 – முகத்தைத் தேடுங்கள்!

“என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று” (சங். 27:8).

நீங்கள் ஜெப நேரத்தில் கர்த்தருடைய முகத்தை நோக்கிப் பார்க்கிறீர்கள். கர்த்தருடைய பிரசன்னத்தை நோக்கிப் பார்க்கிறீர்கள். எவ்வளவு அதிகமாய் அவருடைய முகத்தை நோக்கிப் பார்க்கிறீர்களோ, அதற்கேற்றவாறு உங்களுடைய வாழ்க்கை பிரகாசிக்கிறது.

மோசே சீனாய் மலையில் நாற்பது நாட்கள் தேவனுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். கர்த்தருடைய பிரசன்னத்தில் தங்கி இருந்ததால் அவருடைய முகம் பிரகாசமாய் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்களால் அவருடைய முகத்தை நேருக்கு நேராய் பார்க்கக்கூட முடியாத அளவுக்கு பிரகாசமாய் இருந்தது. ஸ்தேவானின் முகம் தேவதூதனுடைய முகம்போல பிரகாசமாய் இருந்ததை அவனைக் கல்லெறிய வந்த பகைவர்கள்கூட கண்டார்கள். காரணம், ஸ்தேவானின் ஜெப ஜீவியம்.

எந்த ஒரு மனுஷன் ஜெபிக்கத் தவறுகிறானோ அவன் ஆண்டவருடைய பிரகாசத்தையும், அவருடைய மகிமையையும் இழந்தவனாய்க் காணப்படுகிறான். ஜெபிக்காததினால் தன்னை குணமாக்கக்கூடிய தெய்வீக வல்லமையை அவனே புறக்கணித்துவிடுகிறான். ஜெபிக்காததினால், அவன் தானே தனக்கு வரும் ஆசீர்வாதத்தின் நீரூற்றை வேண்டாம் என்று அடைக்கிறவனாய் இருக்கிறான்.

ஆபிரகாமைக் குறித்து ஒரு பழங்காலத்துக் கதை ஒன்று உண்டு. ஒரு முறை அவருடைய வீட்டு வாசலில் ஒரு ஏழை மனுஷன் நின்று கொண்டிருக்கிறதைக் கண்டு, ஓடிச்சென்று அவனை வரவேற்று, அன்புடன் உபசரித்து, அவரது பசியைக் கண்டு சிறந்த உணவையும் கொடுத்தார். அவன் அந்த உணவைக் கர்த்தருக்கு நன்றி சொல்லாமல் உண்ணத் துவங்கியதைக் கண்டார்.

இந்த காரியம் ஆபிரகாமுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. உனக்கு உணவைக் கொடுத்த கர்த்தரை நினையாமலும், நன்றிகூறாமலும் எப்படி உண்ணலாம் என்று கோபமாகக் கேட்டு அந்த ஏழையை விரட்டிவிட்டார்.

அன்று கர்த்தர் ஆபிரகாமுக்கு தரிசனமாகி, “அந்த மனுஷன் பிறந்தது முதல் இதுவரை எழுபது ஆண்டுகள் அவனைப் போஷித்து உடுத்துவித்தேன். ஆனால் அவன் எனக்கு நன்றி செலுத்தவில்லை என்றாலும் நான் பொறுமையாயிருந்து அவனைத் தொடர்ந்து போஷித்து வந்தேன். ஆனால் ஒரு முறை அவன் ஜெபிக்காததை உன்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே, நான் நல்லோரின் மேலும் தீயோரின் மேலும் சூரியனைப் பிரகாசிக்கப் பண்ணி மழையை வருஷிக்கிற தேவன். அவன் மேல் இன்றும் பொறுமையாயிருக்கிறேன்” என்றார்.

தேவபிள்ளைகளே, நமது ஆண்டவர் எல்லோருக்கும் நல்ல ஈவுகளைக் கொடுக்கிறவர். அவரை நோக்கி அன்போடு ஜெபிக்கிறவர்களுக்கு அதிகமான நன்மைகளைத் தர அவர் வல்லமையுள்ளவராயிருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள்.

நினைவிற்கு:- “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளா. 7:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.