AppamAppam - Tamil

நவம்பர் 17 – முன்நோக்கி!

“ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலிப். 3:13,14).

நீங்கள் அவ்வப்பொழுது தேவசமுகத்தில் உங்களை நிலைநிறுத்தி புதிய தீர்மானங்களையும், புதிய பிரதிஷ்டைகளையும் செய்யும்போது, வெற்றியை நோக்கியும், கர்த்தருடைய சமுகத்தின் ஆனந்தத்தை நோக்கியும், பரலோக ராஜ்யத்தின் மேன்மையையும் நோக்கி நடந்து செல்லுகிறீர்கள் என்பதை நீங்கள் மறந்து போய் விடக்கூடாது.

நீங்கள் புது வருடம் அன்று பல பிரதிஷ்டைகளைச் செய்கிறீர்கள். அதைப்போல ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலுமே சில தீர்மானங்களை நீங்கள் எடுக்க வேண்டும். அவற்றின்படி நடக்கவும் வேண்டும். ஒவ்வொரு நாள் காலை வேளையிலும் உங்களை தேவ சமுகத்தில் அர்ப்பணித்து ஜெபிக்க வேண்டும். அப். பவுல், “பின்னானவைகளை மறக்கிறேன். முன்னானவைகளை நாடுகிறேன். இலக்கை நோக்கித் தொடருகிறேன்” என்று எழுதுகிறார். அதுவே அவருடைய தீர்மானமாய் இருந்தது.

முதலாவது நீங்கள், பின்னானவைகளையும், கீழானவைகளையும், தேவன் விரும்பாதவைகளையும் முற்றிலுமாய் உங்களைவிட்டு அகற்றிவிட வேண்டும். சோதோமை விட்டு வெளியே வந்த நீங்கள் மீண்டும் சோதோமை திரும்பிப் பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. எகிப்தை விட்டு வெளியே வந்துவிட்ட நீங்கள் எகிப்திலுள்ள கொம்மட்டிக் காய்களையும், பூண்டுகளையும், மச்சங்களையும் நினைத்துக்கொண்டு இருக்கக்கூடாது.

சிலருக்கு அவர்களது கடந்த கால நினைவுகள் உள்ளத்திலே துக்கத்தையும், வேதனையையும் கொண்டு வருகின்றன. இன்னும் சிலர் கடந்த காலத்தில் நடந்த பழைய அனுபவங்களையே பேசிக்கொண்டு, புதிய நடத்துதலுக்கு தங்களை ஒப்புக்கொடுக்காமல் இருக்கிறார்கள். ஒரு முறை பெர்னாட்ஷா, “கடந்தகால நினைவுகள் மனுஷனை அறிவாளியாக்குவதில்லை. வருங்காலத்தைப் பற்றிய பொறுப்புணர்ச்சியே அறிவாளிக்கு அடையாளம்” என்று சொன்னார்.

இரண்டாவது, முன்னானவைகளையும், மேன்மையானவைகளையும், புதிய காரியங்களையும் நாடுங்கள். கர்த்தர் சொல்லுகிறார்: “முந்தினவைகளை நினைக்க வேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்க வேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்” (ஏசாயா 43:18,19). கர்த்தர் புதிய காரியத்தை உங்களுடைய வாழ்க்கையில் செய்கிறார்.

மூன்றாவது, பஸ், கப்பல், விமானம் ஆகியவற்றிற்கு செல்லும் இடம் குறித்து இலக்கு இருப்பதுபோல, உங்களுக்கும் ஒரு இலக்கு உண்டு. அந்த இலக்கு பூமியிலே கிறிஸ்துவின் பூரணம். நித்தியத்திலே பரம கானான். தேவபிள்ளைகளே, நீங்கள் இலக்கை நோக்கி நடந்துகொண்டு இருக்கிறீர்களா?

நினைவிற்கு:- “ஆகையால், மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி. 12:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.