ஆகஸ்ட் 05 – குமாரனின் பரிசுத்தம்!
“உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்” (1 கொரி. 6:11).
இயேசு கிறிஸ்து, பரிசுத்தத்திற்கான எல்லா காரியங்களையும் செய்து முடித்தவர். அவருடைய அன்பு, உங்களை பரிசுத்தப் பாதையிலே நடத்திச் செல்ல ஏவி எழுப்புகிறது. மனிதன் அசுத்தனாய் இருக்கிறதைக் கண்டு, அவனை கழுவிப் பரிசுத்தப்படுத்தும்படி இயேசு கிறிஸ்து அன்போடு பூமிக்கு இறங்கி வந்தார்.
ஆகவே, கிறிஸ்து உங்களுக்கு பாவ மன்னிப்பைத் தரும்படி தன்னுடைய இரத்தத்தையே சிந்திக் கொடுத்தார். அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் கழுவிச் சுத்திகரிக்கிறது. உங்களை பரிசுத்தவான்களாய் மாற்றி விடுகிறது. கிறிஸ்துவின் அன்பை ருசிக்கிறவன் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவான். அவன் ஒருபோதும் பாவ சந்தோஷங்களை அனுபவிக்கச் செல்லமாட்டான். அவரை அசட்டை செய்து புறக்கணித்து விட்டு, உலக உல்லாசங்களை நாடமாட்டான்.
ஒரு முறை சினிமாத் துறையிலே பணியாற்றின ஒரு சகோதரன் சொன்னார், ‘நான் பணியாற்றுகிற துறை எல்லாவிதத்திலும் மனுஷனுடைய வாழ்க்கையைப் பாழாக்குகிற ஒரு துறை. ஆனால், இதில் நான் தூய்மையாய் வாழக் காரணம், என் மனைவியின் அன்புதான். அவள் என்னை அளவில்லாமல் நேசிக்கிறாள். வியாதி படுக்கையிலெல்லாம் இரவும், பகலும் விழித்திருந்து என்னை கவனித்துக் கொள்ளுகிறாள். என்மேல் உயிரையே வைத்திருக்கிறாள். அவளுக்கு துரோகம் செய்ய என் உள்ளம் ஒப்புவதேயில்லை.’
இயேசுவைப் பாருங்கள்! அவருடைய அன்பு தம்மைத் தாமே நமக்காக ஒப்புக்கொடுத்த ஒரு தெய்வீக அன்பு. “தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும், பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்கு முன் நிறுத்திக் கொள்ளுவதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக் கொடுத்தார்” (எபே. 5:26,27).
பரிசுத்தத்தில் முன்னேறுவதற்கு, இயேசு கிறிஸ்து எல்லா வழிமுறைகளையும் வகுத்து வைத்திருக்கிறார். முன் மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்தார். அவருடைய பரிசுத்த அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கு மாதிரியைத் தந்தார். வேதம் சொல்லுகிறது, “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1 பேது. 1:15).
பல மார்க்கங்களில் பரிசுத்தமாய் ஜீவிக்க வேண்டும் என்ற போதனைகள் இருந்தாலும், கிறிஸ்தவ மார்க்கத்தில் மட்டுமே அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், இம்மார்க்கத்தில் மட்டுமே பரிசுத்தப்படுத்துகிற கல்வாரியின் இரத்தம் இருக்கிறது. பரிசுத்த பாதையில் நடத்திச் செல்லக்கூடிய கிறிஸ்துவின் தெய்வீக அன்பும் இருக்கிறது.
நினைவிற்கு:- “சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்த மாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக” (1 தெச. 5:23).