நவம்பர் 24 – மரணபரியந்தம்!
“அவர் மனுஷரூபமாய் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி. 2:8).
உலகத்தில் ஒவ்வொருநாளும் இலட்சக்கணக்கான ஜனங்கள் மரிக்கிறார்கள். சிலரது மரணங்களினால் யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. சிலுவையிலே ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் கொல்லப்பட்டார்கள். அதை ஒருவருமே பொருட்படுத்தவில்லை. ஆனால் இயேசுகிறிஸ்துவின் கல்வாரிச் சிலுவை மரணம் நிகரில்லாததாயும், இன்றியமையாததாயும், ஆச்சரியமானதாயும் இருக்கிறது.
“அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து; அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான்” (மாற். 15:44) என்று வேதம் சொல்லுகிறது.
கிறிஸ்துவினுடைய மரணமும், அடக்கம்பண்ணப்படுதலும், உயிரோடு எழுந்ததும் நாம் எப்போதும் நினைவுகூர வேண்டிய ஒன்றாகும். அப்.பவுல் எழுதினார், “நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” (1 கொரி. 11:26). திருவிருந்து ஆராதனை கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும் ஆராதனையாகும்.
சில ஆலயங்களிலே திருவிருந்து என்று சொல்லுவார்கள். சில ஆலயங்களிலே நற்கருணையாகிய சாக்கிரமந்து என்று சொல்லுவார்கள். இதைக் கர்த்தருடைய பந்தி என்றும் நாம் அழைக்கிறோம் (1 கொரி. 11:21). இரவு நேரத்தில் இயேசு தம்முடைய சீஷர்களோடு பஸ்காவை ஆசரித்ததினால், அது இரவில் உட்கொள்ளும் உணவாகிறது. எனவேதான் அதனை இராப்போஜனம் என்று சொல்லுகிறோம்.
கிரேக்கத்திலே “யுக்கரிக்” என்ற பதத்திற்கு ஸ்தோத்திரம் செலுத்துதல் அல்லது நன்றி ஆராதனை என்பது அர்த்தமாகும். ஆதிதிருச்சபையில் இதை ஐக்கிய விருந்தின் ஆராதனையாக வைத்திருந்தார்கள். “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்” (அப். 2:42).
ஒரு போர் வீரன் ரோமருடைய படையிலே சேருவதற்கு முன்பாக கடுமையான போர்ப் பயிற்சிகளை மேற்கொள்ளுவான். ஒரு கோப்பை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை எடுத்து அதிலே தன் ஈட்டியை தொய்த்து வீர சபதம் எடுத்துக்கொள்வான். “என்னுடைய சரீரத்தில் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும்வரையிலும் இந்த ரோம சாம்ராஜ்யத்திற்காக என் உயிரையே கொடுப்பேன். யுத்தத்திலே பின்வாங்காமல் முன்நோக்கிச் சென்று எதிரிகளைக் கொன்று வெற்றி சிறப்பேன்” என்று சொல்லுவான். உடனே எல்லாரும் அவனை வாழ்த்தி “நீ தேசத்தின் சிறப்பான போர் வீரானாய்த் திகழுவாய்” என்று மறுமொழி சொல்வார்கள். அவன் எடுக்கும் வீர சபதத்தைத்தான் லத்தீன் மொழியிலே சாக்கிரமந்து என்று சொல்லுவார்கள்.
தேவபிள்ளைகளே, நாமும்கூட கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூருகிற திருவிருந்து ஆராதனையின்போது, ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். என் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும்வரையிலும் உலகம், மாம்சம், சாத்தானுக்கு எதிராக நான் போராடுவேன், பாவத்தை நான் என் வாழ்க்கையில் அனுமதிக்கமாட்டேன். கிறிஸ்துவின் இரத்தத்திற்கும், தியாகத்திற்கும் தகுதியுள்ள வாழ்க்கை வாழுவேன் என்று தீர்மானிக்கவேண்டும்.
நினைவிற்கு:- “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்” (1 பேது.2:24).