அக்டோபர் 24 – வேறொரு தேற்றரவாளன்!
“என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோவா.14:16).
இயேசுவாகிய தேற்றரவாளன், பரிசுத்த ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை முதன்முதலாக சீஷர்களுக்கு அறிமுகப்படுத்துகிற வார்த்தைகளை இங்கே வாசிக்கிறோம். சீஷர்களை தம்முடைய நாமத்திலே ஜெபிக்கும்படி சொன்ன இயேசு, இங்கே பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தருளும்படி, தாமே வேண்டுதல் செய்கிறார்.
பிதாவாகிய தேவன் இரண்டு முக்கியமான வாக்குத்தத்தங்களைத் தந்தார். முதலாவதாக, இயேசுவாகிய மேசியாவை வாக்களித்தார். இரண்டாவதாக, பரிசுத்த ஆவியானவரை வாக்களித்தார். “மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். …. ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்” என்றார் (யோவே. 2:28,29). பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட இந்த இரண்டு வாக்குத்தத்தங்களும், புதிய ஏற்பாட்டிலே நிறைவேறின.
பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் ஆவியானவர் அவர்களுக்குள் நிரந்தரமாய் வாசமாயிருப்பதை நாடினார்கள். தாவீதுகூட, “நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” (சங். 51:10) என்று கேட்டு ஜெபித்தார்.
ஆனால் அவர்களுடைய உள்ளமாகிய பாத்திரம், பாவங்களை நிவிர்த்தி செய்யும்படியான ஆடுமாடு பலிகளினால் பூரணமாக்கப்படவில்லை. இயேசுகிறிஸ்து சிலுவையில் தன்னை ஜீவபலியாக, பாவநிவாரணபலியாக, அகில உலகத்தின் பாவங்களைச் சுமந்துதீர்க்கிற தேவஆட்டுக்குட்டியாக சமர்ப்பித்த பிறகுதான் ஆவியானவர் பூமியிலே ஊற்றப்பட்டார்.
பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவராகிய சத்திய ஆவியான தேற்றரவாளனே (யோவா. 15:26) பரிசுத்த ஆவியானவர். வேதத்தில் அவர் பிதாவின் ஆவியானவர் என்றும் (மத். 10:20) குமாரனுடைய ஆவி என்றும் (கலா. 4:6) அழைக்கப்படுகிறார்.
கிறிஸ்து ஜெபித்தபடி, ஆவியானவர் பெந்தெகொஸ்தே நாளில், மேல்வீட்டறையிலே காத்திருந்து ஜெபித்த ஒவ்வொருவர்மேலும் இறங்கினார். இன்றைக்கும் விசுவாசத்தோடு ஜெபிக்கிற ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். நீங்கள் பெற்றிருக்கிற ஆவியானவர், பரலோக விருந்தாளியானவர். என்றென்றும் உங்களோடு தங்கி இருக்கிறவர். உங்களுடைய சரீரத்தை தன்னுடைய ஆலயமாக்கி, உங்களுக்குள்ளிருந்து ஊக்கமாக ஜெபிக்கிறவர். உங்களை தமது வாசஸ்தலமாக்கி, உங்களை மகிமையால் நிரப்புகிறவர்.
உங்களுக்குள் கிறிஸ்துவும் வாசம்பண்ணுகிறார். பரிசுத்த ஆவியானவரும் வாசம்பண்ணுகிறார். “கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்” (கொலோ. 1:27). அதே நேரம், ஆவியானவரும் உங்களில் வாசம்பண்ணுகிறார். “மகிமையுள்ள ஆவியானவர் உங்கள் மேல் தங்கியிருக்கிறார்” (1 பேது. 4:14).
தேவபிள்ளைகளே, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு ஆறுதல் அளிக்கிறவரும் உதவி செய்கிறவருமாய் இருக்கிறார்.
நினைவிற்கு:- “உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்” (யோவா. 14:17).