அக்டோபர் 10 – ஒரு வழியுண்டு!
“ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வல்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை” (யோபு 28:7).
இங்கே, வல்லூறு என்ற பறவையைக் குறித்து வேதம் சொல்லுகிறது. அதன் கண்கள் மிகவும் கூர்மையானவை. அதனுடைய கால்கள் மிகவும் பெலனுள்ளவை. அதின் செட்டைகள் வேகமாய்ப் பறக்க உதவுபவை. அவை மற்றப் பறவைகளையும், எலி, முயல் போன்றவற்றையும் வேட்டையாடிப் புசிக்கின்றன. குஞ்சுகளுக்கும் ஊட்டுகின்றன. சில வல்லூறுகள் எத்தனையோ மைல்கள் தூரமாகச் சென்றாலும், திரும்புகையில் வழியைத் துல்லியமாய் கண்டுபிடித்து தங்கள் கூட்டுக்குத் திரும்பி வந்துவிடக்கூடியவை.
யோபு பக்தன் வல்லூறின் கண்களுக்கும் புலப்படாத ஒரு வழியைக்குறித்து சொல்லுகிறார். ஆகாய விமானிகள்கூட அதைக் காணவில்லை. சந்திர மண்டலத்திற்கு ராக்கெட்டிலே பறந்து செல்லுகிற விண்வெளி வீரரும் அந்த வழியைக் கண்டுபிடிக்கவில்லை. யோபு பக்தன் அந்த வழியைக்குறித்து ஒரு விடுகதையைப்போல சொல்லுகிறார். அதுதான் கர்த்தருடைய வருகையிலே பரிசுத்தவான்கள் பறந்து செல்லுகிற வழி.
ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறார், “அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்து வருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை” (ஏசா. 35:8).
அந்த வழி உங்களைப் பரலோகத்திற்குக் கொண்டுசெல்லும் வழி. வேதம் சொல்லுகிறது, “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத். 7:13,14).
அன்றைக்கு எலியா அதே வழியாகத்தான் அக்கினி இரதங்களும், அக்கினி குதிரைகளும் பிரிக்க, சுழல்காற்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கக்கூடும். ஏனோக்கும் மரணத்தைக் காணாதபடி அதே வழியிலேதான் சென்றிருக்கக்கூடும். இயேசுகிறிஸ்து பூமியைவிட்டு கடந்துசெல்லும் நேரம் வந்தபோது, மேகங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டன. அந்த வழியாகத்தான் அவர் எடுத்துக்கொள்ளப்பட்டு பிதாவின் வலதுபாரிசத்திலே வீற்றிருந்தார்.
எக்காள சத்தம் தொனிக்கும்போது, நாமும்கூட அந்த வழியிலே பறந்து செல்லுவோம். அன்றைக்கு உலகம் நம்மையும் அந்த வழியையும் பார்த்து ஆச்சரியப்படும். “மேகத்தைப்போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்?” (ஏசா. 60:8). “அம்மினதாபின் இரதம்போல அன்று பறந்து செல்லுவேன், என் நேசர் இயேசுவின்மேல் சார்ந்தே” என்று பாடி மகிழ்வோமாக.
உலகத்தில் நாம் வாழுகிற காலம் கொஞ்சம். அது நிழலைப்போல ஓடி மறைந்துவிடும் (சங். 144:4). புகையைப்போல கரைந்து போகும் (யாக். 4:14). கதையைப்போல கடந்து போய்விடும் (சங். 90:9). காலையிலே பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோகும் புல்லைப்போலாகிவிடும் (சங். 90:6). நாமோ கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்போம்.
நினைவிற்கு:- “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவா. 14:3).