அக்டோபர் 09 – வலையும் ஒற்றுமையும்!
“எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா” (நீதி. 1:17).
சாலொமோன் இராஜாவுக்கு கர்த்தர் ஞானத்தைக் கொடுத்தபோது, மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், மச்சங்கள் ஆகியவற்றைக்குறித்த வாக்கியங்களைச் சொன்னார் (1 இரா. 4:33). ஒரு பறவையைப் பிடிக்க வேண்டுமானால், அது பார்க்கிற விதத்திலே அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரித்தால் நிச்சயமாக அதிலே சிக்காது. சாத்தானும்கூட நேரிடையாக நம்முடைய கால்களுக்கு வலைவிரிப்பதில்லை. மறைமுகமான கண்ணிகளை வைக்கிறான். ஆசை இச்சைகளைக் காண்பிக்கிறான். சிலர் சாத்தானின் வலையை அறியாமல் அதிலே விழுந்து வேதனைகளுக்கு ஆளாவதுண்டு.
பழங்காலத்து கதை ஒன்று உண்டு. கூட்டமாகப் புறாக்கள் மேய்ந்துகொண்டிருக்கிறதைக் கவனித்த ஒரு வேடன், அவை இறங்குகிற இடத்தைப் பார்த்திருந்து, அவைகளுக்கு தானியம்போட்டு, வலை விரித்து வைத்திருந்தான். புறாக்கள் அந்த ஆபத்தினை அறியாமல் வலையில் சிக்கிக்கொண்டன. ஆனாலும், புறாக்கள் தங்களுக்குள்ளே ஒரு திட்டம் தீட்டி, வேடன் வரும்போது, ஒன்றுபோல முழு பெலத்தோடு வலையை இழுத்துக்கொண்டு பறந்துவிடுவது என்று முடிவு செய்தன. அப்படியே அவை தப்பிச்சென்று, ஒரு எலியினிடத்தில் போய், வலையை அறுக்கச்செய்து சுதந்தரம் பெற்றன. தேவனுடைய பிள்ளைகள் ஒருமித்து ஜெபிக்கும்போது, சாத்தானுடைய வல்லமையிலிருந்தும், வலையிலிருந்தும் விடுதலை பெற வழி பிறக்கும்.
ஒருவர் ஒரு கண்ணியில் சிக்கிக்கொண்டாலோ, பாவச்சேற்றில் விழுந்தாலோ மற்றவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாரமெடுத்து ஜெபித்து, அவரை வெளியே தூக்கிவிட வேண்டும். வேதம் சொல்லுகிறது, “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்” (சங். 133:1,3).
நாம் கர்த்தருடைய வீட்டாரும், மேய்ச்சலின் ஆடுகளும், சுதந்தரவாளிகளுமாக இருக்கிறோம். இயேசு நம்முடைய மூத்த சகோதரன். உடன் பிறந்த சகோதரனிலும் இனிமையான, மனதுருக்கமுள்ள, பாசமுள்ள சகோதரன். இயேசு நம்மை சகோதரர் என்று அழைக்க வெட்கப்படவில்லை (எபி. 2:11).
பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களே கர்த்தருடைய சகோதர சகோதரிகள். கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்ட தேவ ஜனங்களே சகோதர சகோதரிகள் (மத். 12:50). அவர்களே பரலோகத்தில் பேரெழுதப்பட்டிருக்கிற சர்வசங்கமாகிய சபை (எபி. 12:23). இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார் (அப். 2:47).
தேவபிள்ளைகளே, சகோதரர்களின் ஐக்கியமாகிய சபை கூடிவருதலை ஒருநாளும் விட்டுவிடாதிருங்கள் (எபி. 10:25). “ஒன்று கூடி நாம் ஜெபிப்போம், சாத்தானை மிதிப்போம்; தேசத்தை சுதந்தரிப்போம்.” தேவபிள்ளைகளின் ஒருமனப்பாடும், அன்பின் ஐக்கியமும் இருந்தால் கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்ய முடியும். சாத்தானுடைய எல்லா வலைகளுக்கும், கண்ணிகளுக்கும் தப்ப முடியும்.
நினைவிற்கு:- “வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்” (சங். 124:7).