செப்டம்பர் 24 – செவிகொடுக்கும் இருதயம்!
“உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால், உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி (திருப்புவார்)” (உபா. 30:2,3).
உங்களுடைய இருதயம் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கிற இருதயமாக இருக்கட்டும். அதோடல்லாமல் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, கீழ்ப்படிகிற இருதயமாகவும் இருக்கட்டும். கர்த்தருக்குச் செவிகொடுக்கும்போது, என்னென்ன ஆசீர்வாதங்கள் வந்து சேரும் என்பதை உபா. 28:1-14 இலும், அவரது சத்தத்துக்கு செவி கொடாமல்போனால் வந்து சேர இருக்கும் சாபங்களை அவ்வதிகாரத்தின் மீதப்பகுதியிலும் வேதம் பட்டியலிட்டுத் தெரிவிக்கிறது.
கர்த்தருடைய சத்தத்தை நாம் வேத வசனங்களின் மூலமாகத்தான் கேட்கமுடியும். வேத வசனங்களெல்லாம் ஆவியும் ஜீவனுமாய் இருக்கிறது. ஆவியானவரால் அருளப்பட்டிருக்கிறது. அவை நம் ஆத்துமாவோடும், ஆவியோடும் பேசுகின்றன.
அவை சோர்வு நேரங்களிலெல்லாம் நம்மை திடப்படுத்துகின்றன. அதைரியத்தையும், அவிசுவாசத்தையும் மாற்றி விசுவாசத்தைத் தூண்டுகின்றன. பாதை தெரியாமல் திகைக்கும்போதெல்லாம், கால்களுக்கு தீபமாய், பாதைக்கு வெளிச்சமாய் இருக்கின்றன. வேதம் சொல்லுகிறது, “கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது” (சங். 29:4).
சிலர் தேவனுக்கு எதிராக விதண்டாவாதம் செய்கிறார்கள். மதுபானம் குடிக்கக்கூடாது என்று ஏன் பத்துக் கட்டளைகளில் எழுதவில்லை? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கக்கூடாது என்று வேதம் சொல்லுகிறதா? சிகரெட் பிடிக்கக்கூடாது என்று எங்கே எழுதப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பேசுகிறார்கள். இவர்களுடைய உளரல்களுக்கு அளவே கிடையாது. கர்த்தருடைய வார்த்தைக்கு முழு இருதயத்தோடும் செவி கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாததே அவர்களது இந்த வீண்பேச்சுக்குக் காரணம்.
சாதாரணமாக மது, மாது, சூது ஆகியவை வேண்டாம் என்று உலக மக்களே வெறுத்துத்தள்ளுகிறார்கள். அநேகர் உலகப்பிரகாரமான கேளிக்கைகளை விரும்புவதில்லை. தேவபிள்ளைகளுடைய நீதி அவர்கள் நீதியிலும் அதிகமாயிருக்க வேண்டுமல்லவா?
கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியிட்டு, அவருடைய பாதத்தில் காத்திருக்கும்போது கர்த்தர் உங்களோடு பேசுவார். சொப்பனத்தின் மூலமாகவும், தரிசனத்தின் மூலமாகவும், வேதவசனங்கள் மூலமாகவும் அவர் உங்களோடு பேசுவார். அவரது வார்த்தைக்குச் செவிகொடுங்கள்.
கர்த்தருக்குச் செவிகொடுக்கும்போது, ஆசீர்வாதங்கள் உங்களை சூழ்ந்துகொள்வதுபோலவே, கர்த்தருக்குச் செவிகொடுக்காமல் இருதயத்தைக் கடினப்படுத்தும்போது, சாபங்கள் வர நேரும். தேவபிள்ளைகளே, சாபங்களுக்கு உங்களை விலக்கிக் காத்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்” (உபா. 28:12).