செப்டம்பர் 18 – வானமும் கிருபையும்!
“அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது” (சங். 103:10,11).
பூமிக்கு வானம் எவ்வளவு உயரம் என்று இதுவரை யாரும் அளக்கவில்லை. அளக்கவும் முடியாது. மனிதர்கள் இன்றைக்கு வானளாவும் கட்டிடங்களைக் கட்டவேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். சாதனை படைக்க விரும்புகிறவர்கள், “வானம்தான் எங்களுடைய எல்லை” என்று வானத்தைக் காண்பிக்கிறார்கள். இன்னும் சிலர், வானத்தையும் தாண்டி விடுவோம் என்று சவால் விடுகிறார்கள்.
ஆதி. 11-ம் அதிகாரத்திலே, அன்றைய ஜனங்கள், “வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப்பண்ணுவோம் வாருங்கள்” என்றார்கள் (ஆதி. 11:4). அதனிமித்தம் அவர்கள் பெருமைகொண்டார்கள். ஆகவே மனு புத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்கு கர்த்தர் இறங்கினார். அவர்கள் ஒரே கூட்டமாயிருந்தார்கள். ஒரே பாஷையும் அவர்களுக்கு இருந்தது. கர்த்தர் அவர்களுடைய பாஷைகளைத் தாறுமாறாக்கினார். அவர்களைப் பூமியெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். அப்பொழுது நகரம் கட்டுகிறதை அவர்கள் விட்டுவிட்டார்கள்.
இன்றைக்கும் வானளாவ கட்டிடங்களைக் கட்டும்படி பல தேசங்கள் போட்டிப்போடுகின்றன. அமெரிக்கா தன் பெருமையாக நியூயார்க் பட்டணத்திலே இரட்டை மாடிக் கட்டிடங்களை கட்டியிருந்தது. பகைவர்கள் விமானங்களைக்கொண்டு மோதி அந்தக் கோபுரங்களைத் தகர்த்து, பெரிய அழிவை உண்டாக்கினார்கள்.
பிரான்சு தேசத்தில் ஈஃபல் கோபுரமும், மலேசியாவில் பெட்ரோனாஸ் கோபுரமும், துபாயில் உள்ள பர்ஜ் கலிஃபாவும் உலகத்தின் உயர் கோபுரங்களாக உள்ளன.
ஆனால் தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு வானளாவும் உயர்ந்த கோபுரம் ஒன்று உண்டு. அதுதான் கர்த்தருடைய கிருபை என்கிற கோபுரம். கர்த்தருடைய உயர்ந்த கிருபையை யாராலும் அளக்கவே முடியாது. “அவருக்குப் பயந்தவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாய் இருக்கிறது (சங். 103:11). “கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது” (சங். 36:5).
தாவீது இராஜா, தன்மேல் தேவனுடைய கிருபை மகா பெரிதாயிருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்” (சங். 8:3-6) என்று அவர் கர்த்தரை வானளாவும் உயர்த்தி ஸ்தோத்திரித்துச் சொல்லுவதை வேதத்தில் காண்கிறோம்.
தேவபிள்ளைகளே, அதுதான் தேவகிருபையின் உயரம். அளக்க முடியாத கிருபை. மகா மேன்மையான, மகிமையான கிருபை.
நினைவிற்கு:- “அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார்” (எரே. 51:15).