செப்டம்பர் 17 – மகிமையாய் இருப்பார்!
“கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்” (ஏசா. 60:19).
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலுள்ள 60-ம் அதிகாரம் மிக அருமையானதும் ஆழமானதுமான ஒரு அதிகாரமாகும். அது தேவனுடைய மகிமையைக்குறித்து பேசுகிற ஒரு அதிகாரம். அந்த அதிகாரம், “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” என்று ஆரம்பிக்கிறது. கர்த்தருக்காக யார், யார் எழும்பிப் பிரகாசிக்கிறார்களோ, அவர்களுக்கு கர்த்தரே நித்திய வெளிச்சமாகவும் மகிமையாகவும் இருப்பார் (ஏசா. 60:19).
கிறிஸ்தவ வாழ்க்கையின் முதல் அனுபவம் மகிமையைக் காண்கிற அனுபவமாகும். மோசே, தேவனுடைய மகிமையைக் காண வாஞ்சித்து, கன்மலையின் வெடிப்பிலே மறைந்திருந்து கர்த்தருடைய மகிமையைக் கண்டார். தாவீதும் கூட, தேவ மகிமையைக் காண விரும்பினார் (சங். 27:4). “இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்” (சங். 63:2) என்று அவர் சொல்லுகிறார்.
இரண்டாவது அனுபவம், மகிமையை பிரதிபலிக்கும் அனுபவமாகும். சீனாய் மலையிலே நாற்பது நாட்கள் தேவ சமுகத்தில் கர்த்தருக்கு முன்பாக மோசே நின்றபோது, அவரையறியாமல் அவருடைய முகம் பிரகாசித்தது. ஆம், தேவ சமுகத்தில் இரவும் பகலும் காத்திருக்கிறவர்களுடைய முகம் பிரகாசிக்கத்தான் செய்யும். அவர்களது வாழ்க்கையும் பிரகாசிக்கத்தான் செய்யும். மகிமையைப் பிரதிபலிக்கும் அனுபவம் மகா சிறப்பானது.
மூன்றாவது அனுபவம், மகிமையின் அபிஷேகத்தால் நிரப்பப்படுகிற அனுபவமாகும். பரிசுத்த ஆவியானவர் மகிமையுள்ள ஆவியானவர் என்று அழைக்கப்படுகிறார் (1 பேது. 4:14). பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறும்போது, மகிமையின் தேவன் நமக்குள் வந்து வாசம்பண்ணுகிறார். வேதம் சொல்லுகிறது, “வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்” (சங். 24:7).
மகிமையின் அபிஷேகத்தால் நிரப்பப்படுகிற அனுபவத்தோடு ஒருவர் நின்றுவிடக்கூடாது. பெற்றுக்கொண்ட மகிமையோடு எழும்பிப் பிரகாசிக்கவேண்டும். இதைத்தான் ஏசாயா தீர்க்கதரிசி, “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசா. 60:1) என்கிறார்.
நீங்கள் இருண்ட உலகத்தில் வாழ்கிறீர்கள். கர்த்தர் உங்களை உலகத்திற்கு ஒளியாக மட்டுமல்லாமல், மகிமையாகவும் வைத்திருக்கிறார். எழும்பிப் பிரகாசிக்கவேண்டியது உங்களுடைய கடமை. “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்” (ஏசா. 60:2).
தேவபிள்ளைகளே, நீங்கள் அடுத்த அனுபவத்திற்குக் கடந்து வாருங்கள். கர்த்தருடைய வருகையில் நீங்கள் மகிமையின்மேல் மகிமையடையவேண்டும். கிறிஸ்துவுக்கு ஒப்பாக மறுரூபமாகவேண்டும். மகிமையின் தேசத்தில் மகிமையின் இராஜாவாகிய கிறிஸ்துவோடுகூட என்றென்றைக்கும் மகிழ்ந்திருக்கவேண்டும். ஆம், அந்த நாள் சமீபமாய் இருக்கிறது.
நினைவிற்கு:- “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத் தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரி. 3:18).