Uncategorized

செப்டம்பர் 08 – உறவுகளை உயிர்ப்பிப்பார்!

“நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர் (சங்.138:7).

கிராமப்புறங்களில் மழைக் காலம் துவங்கி, முதல் மழை பெய்யும்போது கோடை வெயிலினால் வாடிக்கிடக்கும் மரங்களெல்லாம் உயிர்ப்பிக்கப்படும். வெட்டாந்தரைபோல காணப்பட்ட நிலத்திலே, பச்சைபசேலென்று புல்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். தரையில் எப்பொழுதோ விழுந்து கிடந்த விதைகள் அழகான செடியாக முளைத்தெழும்பும். மழையானது பயிர்ப்பச்சைகளை உயிர்ப்பித்துவிடும். அதைப் பார்க்கும்போது மனதுக்கு மிகுந்த சந்தோஷமாயிருக்கும்.

அதுபோலவே உயிர்ப்பிக்கிற வல்லமை ஆவியானவருக்கு உண்டு. வேதம் சொல்லுகிறது, “தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்” (ரோம. 8:11). “ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது” (யோவா. 6:63). “எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது” (2 கொரி. 3:6). உடைந்து போன உறவுகளை கர்த்தர் உயிர்ப்பிக்கச் செய்கிறார்.

ஒரு சகோதரி இரட்சிக்கப்பட்டு அபிஷேகம் பெற்ற தன் ஒரே மகளை வெளிதேசத்தில் வேலை செய்துவந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அந்த கணவர் திருமணத்திற்குப் பிறகு சிலநாட்கள் இந்தியாவில் இருந்துவிட்டு வெளிதேசத்திற்கு திரும்பிச் சென்றார். தன் மனைவியிடம் தான் அங்கு சென்று விசா எடுத்துவிட்டு, பிறகு அவரை அழைத்துக்கொண்டு போவதாகவும் சொன்னார். ஆனால் பல நாட்கள் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. திடீரென்று ஒருநாள் அந்த சகோதரனிடமிருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்தது.

அதிர்ந்துபோன சகோதரி நேராக தன் உபவாச அறைக்குச் சென்று, “தேவனே என் மகளுடைய குடும்ப வாழ்க்கையை உயிர்ப்பியும். உடைந்த உறவுகளை உயிர்ப்பியும். என் மகள் உம்மில் மகிழ்ந்து களிகூரும்படி குடும்பத்தை திரும்பவும் உயிர்ப்பிக்கமாட்டீரோ என்று சொல்லி கண்ணீரோடு ஜெபித்தார். பல நாட்கள் உபவாசித்து ஜெபித்தபோது, ஒரு தெய்வீக பிரசன்னம் அவரை மூடியது. உள்ளத்தின் ஆழத்தில் நதிபோல சமாதானம் பொங்கியது. அவர் உபவாசத்தை முடித்துவிட்டு சந்தோஷமாய் வெளியே வந்தார்.

என்ன ஆச்சரியம்! கர்த்தருடைய கரம் குறுக்கிட்டதினால், இமைப்பொழுதில் தன் மகளுடைய கணவன் உள்ளத்தை கர்த்தர் திருப்பினார். தெய்வீக அன்பை உள்ளத்தில் கொண்டுவந்தார். சில நாட்களுக்குள் அந்த மனிதர் இந்தியாவுக்கு திரும்பிவந்து தன் மனைவியை தன்னோடு வாழும்படி வருந்தி அழைத்துக்கொண்டு போனார். அந்த குடும்பம் இனிமையான ஒரு குடும்பமாய் மாறிற்று.

மீண்டும் அந்த சகோதரி தன் மகளின் கணவனுக்காக ஜெபித்து, ‘என் தேவனே, என் மகளை எப்படி இரட்சித்து அபிஷேகித்தீரோ, அப்படியே அவள் கணவனையும் இரட்சித்து அபிஷேகிக்க வேண்டும்’ என்று மன்றாடினார். சில நாட்களிலேயே அவர் இரட்சிக்கப்பட்டு குடும்பமாய் ஊழியம் செய்ய தன்னை ஒப்புக்கொடுத்தார். வேதம் சொல்லுகிறது, “அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்” (1 கொரி. 15:45).

நினைவிற்கு:- “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்” (எபே. 2:4,5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.