Appam, Appam - Tamil

ஆகஸ்டு 19 – ஒருவனாயிருக்கையில்!

“உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், …. ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன் (ஏசா. 51:2).

கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதிக்கும்போது, ஆபிரகாம் ஒருவனாய் இருந்தார். அவருடைய தேசத்திலிருந்தும், தகப்பன் வீட்டிலிருந்தும், இனத்தவர்கள் மத்தியிலிருந்தும் வேறுபிரித்து அவரைக் கர்த்தர் அழைத்துச் சென்றார். ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்து, ஆபிரகாமை பலுகிப் பெருகப்பண்ணினார்.

நீங்கள் ஒருவனாய் தனித்துக் காணப்படுகிறீர்களா? என்னோடு இணைந்து ஜெபிக்க ஒருவரும் இல்லையே, என் கிராமத்தில் நான் மட்டும்தான் இரட்சிக்கப்பட்டிருக்க என்னோடு இணைந்து ஆராதிக்க குடும்பத்தில் ஒருவரும் இல்லையே என்றெல்லாம் அங்கலாய்த்துக்கொண்டிருக்கிறீர்களா? இப்படிப்பட்ட தனிமை சூழ்நிலையிலே நிச்சயமாகவே கர்த்தருடைய வல்லமையை நன்றாக உணருவீர்கள்.

ஆபிரகாம் கர்த்தருடைய வாக்கின்படியே கானானை நோக்கிப் புறப்பட்டபோது, அவருக்கு உதவுவதற்கென ஒருவரும் இல்லை. ஆனால் கர்த்தரே துணை நின்று அவரைப் பாதுகாத்தார், பராமரித்தார், அருமையாய் வழிநடத்தினார். எனக்கென்று யாரும் இல்லையே, எனக்காகப் பேச யாரும் இல்லையே என்று கவலைப்படுகிறீர்களா? நீங்கள் ஒருவனாய் இருக்கும்போதே கர்த்தரால் உங்களை ஆசீர்வதிக்க முடியும். ஆயிரமாயிரம் உதவிக் கரங்களை அவர் உங்களுக்கு எழுப்பித் தருவார்.

ஆபிரகாம் தனிமையாய் நின்றாலும், அவர் எப்போதும் தேவனுக்கு முன்பாக நிற்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் (ஆதி. 18:22). இதுவே ஆசீர்வாதத்தின் திறவுகோலாகும். வானத்தையும், பூமியையும் உண்டாக்கின சர்வ வல்லவருக்குமுன்பாக நீங்கள் நிற்கும்போது, அவர் சகல வாசல்களையும் உங்களுக்குத் திறந்து தருவார். வனாந்தரத்திலே வழியை உண்டாக்கினவர், உங்களுக்கும் வழியைத் திறப்பார். உங்களுக்குத் துணைநின்று யாவையும் செய்துமுடிப்பார்.

எலியா கர்மேல் பர்வதத்தின்மேல் ஏறும்போது தனி மனிதனாய் ஏறினார். இஸ்ரவேல் ஜனங்கள் முழுவதுமாய் பாகால் விக்கிரக ஆராதனையிலே ஊறிப்போய் கிடந்தார்கள். எலியாவுக்கு எதிராக நானூற்றைம்பது பாகால் தீர்க்கதரிசிகள் நின்றார்கள். ஆகாப் இராஜாவும் யேசபேல் ராணியும் எதிர்த்தார்கள்.

எலியா ஒருவனாய் இருக்கையில், கர்த்தர் எலியாவின் ஜெபத்தைக் கேட்டு வானத்திலிருந்து அக்கினியைப் பொழிந்தருளினார். ஒரே நேரத்தில் ஜனங்கள் எல்லாருடைய முழங்கால்களும் முடங்கி, நாவுகள் யாவும் கர்த்தரே தேவன் என்று அறிக்கை பண்ணினது. நான் கர்த்தருக்கு முன்பாக நிற்கிறவன் (1 இரா. 17:1) என்பதே எலியாவின் சாட்சி.

எலியாவின் சிஷ்யனாக ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் எலியாவைப் பின்பற்றின எலிசா கர்த்தருக்கு முன்பாக நிற்கக் கற்றுக்கொண்டார். பெரிய இராஜாவுக்கு முன்பாக நின்று, “சேனைகளுடைய கர்த்தருக்கு முன்நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” என்றார் (2 இரா. 3:14).

தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்கு முன்பாக நிற்பீர்களென்றால், அற்ப மனுஷருக்கு முன்பாக பயந்து கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கவேண்டியதே இராது. காவல் நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் அலைந்து திரிவதுமில்லை. உங்கள் நம்பிக்கையை கர்த்தர்பேரில் வைத்து அவருக்கு முன்பாக நில்லுங்கள்.

நினைவிற்கு:- “நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்” (லூக். 1:19).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.