ஜுன் 06 – வாசனை மலர்கள்!
“நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்” (உன். 2:1).
பொதுவாக, நாம் இந்த வசனத்தை இயேசுகிறிஸ்துவுக்கே ஒப்பிட்டுப் பேசி பழகிக்கொண்டோம். இயேசுவை சாரோனின் ரோஜா என்றும், பள்ளத்தாக்கின் லீலி என்றும் போற்றுகிறோம். ஆம், உண்மையில் அவர் வாசனையைப் பரிமளிக்கிற ரோஜாவாகவும், இருதயத்தை கவர்ந்திழுக்கிற லீலிபுஷ்பமாகவும் இருக்கிறார்.
ஆனால், உன்னதப்பாட்டிலுள்ள இந்த வசனத்தை மூல மொழியிலே படிக்கும்போது மணவாட்டி தன்னைக்குறித்து பேசுகிறதாகவே எழுதியிருக்கிறது. ‘நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்’ என்று ஸ்திரீகளுக்குள்ளே ரூபவதி சொன்னபோது, ஆத்தும நேசர் அவளைப் பார்த்து ‘முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள் எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்’ என்று போற்றுகிறார்.
உங்கள் மனக்கண்களுக்கு முன்பாக அந்த இரண்டு மலர்களையும் வைத்து தியானித்துப்பாருங்கள். ஒன்று, எல்லோராலும் பார்க்கக்கூடிய அளவு சாரோனின் மேட்டிலே, செழிப்பான நிலத்திலே கண்களைக் கவருகிறவிதத்தில் பூத்துக் குலுங்குகிற ரோஜா புஷ்பம். அது பகலிலே மலரக் கூடியது. ஆனால், மறுபக்கத்திலே யாரும் எளிதாய்க் காணமுடியாதபடி பள்ளத்தாக்குகளிலே, முட்களின் மத்தியிலே, இரவு நேரத்திலே மலர்ந்து மணம் வீசுகிற லீலி புஷ்பம்.
நாம் பகற்காலத்திலும், இராக்காலத்திலும், செழிப்பின் நாட்களிலும், செழிப்பற்ற நாட்களிலும் கர்த்தருக்காக மணம் வீசவேண்டும். முட்களின் மத்தியிலே பாடு அனுபவிக்கிற நிலைமையிலும் அவருக்காக மணம் வீசவேண்டும். இயேசு சொன்னார், “பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” (யோவா. 9:4).
ஆகவே அவர் பகற்காலமெல்லாம் பட்டணம், பட்டணமாய் நடந்து இராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவித்தார். அவருடைய வாழ்க்கை இரவும், பகலும் மணம் வீசின வாழ்க்கையாயிருந்தது. ரோஜா புஷ்பத்தின் நிறம் சிவப்பாயிருப்பதானது, இயேசுவின் இரத்தத்தையும், தியாகத்தையும் கல்வாரி மரணத்தையும் அன்போடு ஞாபகப்படுத்துகிறது.
“கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும் (இயேசுவை), அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்” (லூக். 23:33). அவர் சிலுவையில் அறையப்பட்ட வேளையிலும்கூட முறுமுறுக்காமல் “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக். 23:34) என்று சொல்லி அன்பின் நறுமணத்தை கமழச்செய்தார்.
லீலிபுஷ்பம் வெண்மையாய் இருந்து கிறிஸ்துவினுடைய பரிசுத்தத்தையும், கறைதிரையற்ற ஒரு தூய்மையான வாழ்க்கையையும் நமக்கு நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கிறது. தேவபிள்ளைகளே, அவர் பரிசுத்தராய் இருக்கிறதுபோல நாமும் பரிசுத்தராய் இருக்கவேண்டும் அல்லவா? உலகத்தில் உள்ள எந்த ஒரு வாசனையைப்பார்க்கிலும் பரிசுத்தத்தின் வாசனை ஒப்புயர்வற்ற வாசனையாயிருக்கிறது.
நினைவிற்கு:- “உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது” (உன். 1:3).