Appam, Appam - Tamil

நவம்பர் 30 – பிரதான புத்திமதி!

“நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்” (1 தீமோ. 2:1).

ஆவிக்குரிய தகப்பனாகிய அப். பவுல் தன்னுடைய ஆவிக்குரிய மகனாகிய தீமோத்தேயுவுக்கு அநேக புத்திமதிகளை எழுதினார். ஒவ்வொரு புத்திமதியும் மாணிக்கக் கற்களைப்போன்று விலையேறப்பெற்றவை. முத்துக்களைப் போன்று கிடைப்பதற்கு அரிதானவை. எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணுவதே அப்படிப்பட்ட அருமையான புத்திமதிகளுக்குள்ளே பிரதான புத்திமதியாகும்.

ஏன் அதைப் பிரதானமான புத்திமதியாய் அவர் சொன்னார்? ஏனென்றால் “நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்” (1 தீமோ. 2:2). ஜெபிக்காவிட்டால் அந்தகார வல்லமைகள் பெலன்கொள்ளும். துன்மார்க்கரும் சண்டாளர்களும் ஓடித்திரிவார்கள். தேசத்தில் சமாதானம் அற்றுப்போகும். தேவனுக்கு விரோதமாகச் சட்டங்களை இயற்றுவார்கள். கலகமும் கலவரங்களும் தேசத்தில் உண்டாகும்.

அப். பேதுரு அதைக்குறித்து எழுதும்போது, “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்” (1 பேது. 4:7). ஜாக்கிரதை இல்லாமல் கொஞ்சம் அயர்ந்துவிட்டால் எதிரி அதைப் பயன்படுத்திக்கொள்வான். இராணுவ வீரர்கள் தன்னுடைய நாட்டைப் பாதுகாப்பதற்கு விழித்துக்கொண்டு ஜாக்கிரதையாய் இருக்கிறதுபோல உங்களுடைய குடும்பத்தையும், தேசத்தையும், பாதுகாத்துக்கொள்ள ஜாக்கிரதையான ஜெபம் மிகவும் அவசியம்.

உங்களுடைய ஜெபம் வல்லமையுள்ளது. தவறான வழிகளிலே அழிவுக்கு நேராய் விரைந்து செல்லுகிற மக்களை மீட்டெடுக்க நேரம் செலவழித்து ஜெபியுங்கள். இன்றைக்கு செய்தித்தாள்களைப் பார்த்தால் திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற ஏராளமான சம்பவங்களே இடம்பெற்றுள்ளதைக் காண்கிறோம். குற்றவாளிகளைச் சட்டத்தினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சமுதாயத்தினாலும் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. சிறைக்கம்பிகளுக்கோ அல்லது வேறு எந்தத் தண்டனைகளுக்கோ அவர்கள் பயப்படுவதுமில்லை. ஒரே வழி, ஜெபம் என்கிற ஆயுதத்தை பயன்படுத்துகிறதுதான்.

நோவாவின் காலத்தில் உலகம் சீர்கெட்டுப்போயிருந்தது. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டார் (ஆதி. 6:5).

போதுமான ஜெபவீரர்கள் அன்றைக்கு இல்லாதிருந்ததினால் கர்த்தர் உலகத்தை ஜலப்பிரளயத்தினால் அழிக்கச் சித்தமானார். ஆனால் தேவனுடைய கோபாக்கினை இஸ்ரவேலர்மேல் திரும்பினபோது மோசே எவ்வளவாய் இஸ்ரவேல் ஜனங்களுக்காக ஜெபித்தார்! “அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான்” (சங். 106:23). ஆகவே தேவனுடைய கோபத்திலிருந்து இஸ்ரவேலர் தப்புவிக்கப்பட்டார்கள். தேவபிள்ளைகளே, ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஜெபமே ஜெயம்.

நினைவிற்கு:- “நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்” (எசே. 22:30).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.