நவம்பர் 18 – குணசாலியான யாக்கோபு!
“யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்” (ஆதி.25:27).
முற்பிதாக்களில் ஒருவர்தான் யாக்கோபு. கர்த்தர் யாக்கோபை மிகவும் ஆசீர்வதித்தார். யாக்கோபுக்கு தேவபிரபு என்று அர்த்தம்கொள்ளும் இஸ்ரவேல் என்ற பெயரைச் சூட்டினார். யாக்கோபின் சுபாவமும் குணாதிசயங்களும் நமக்கு ஆச்சரியத்தைத் தருகின்றன. யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தார். யாக்கோபின் தாய் குணசாலியான ஸ்திரீ என்பதால் அவரும் குணசாலியாய் இருந்தார்.
வேதம் சொல்லுகிறது, “குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்” (நீதி. 31:10,28). குணசாலியான ஸ்திரீகள்தான் குணசாலியான பிள்ளைகளை உருவாக்குகிறார்கள். யாக்கோபு தன் தாயோடு மிகப் பிரியமாய் இருந்ததால் அவரும் குணசாலி என்று அழைக்கப்பட்டார்.
ஆவிக்குரிய ஜீவியத்திலே வளர்வதற்கு நமக்குத் தாய்போன்ற தேவனுடைய ஊழியக்காரர்கள் அவசியம். அப். பவுல் தாயைப்போன்ற ஒரு தேவனுடைய ஊழியக்காரர். “பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்” என்று அவர் எழுதுகிறார் (1 தெச. 2:7,8).
யாக்கோபின் அடுத்த மேன்மை என்ன? அவர் கூடாரவாசி. கூடாரம் என்பது இந்த உலகம் தற்காலிகமானது என்பதையும், பெயர்த்துக்கொண்டு போய்விடக்கூடியது என்பதையும் வெளிப்படுத்துகிறது. வேதத்தில் ஏராளமான கூடாரங்கள் உண்டு. நோவா திராட்சரசம் குடித்து வெறித்து தன் கூடாரத்தில் படுத்திருந்தார் (ஆதி. 9:21).
லோத்து நீர்வளமும் நில வளமும் நிரம்பியிருந்த சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டார் (ஆதி. 13:12). லாபானின் கூடாரம் உண்டு (ஆதி. 31:34). இசக்காரின் கூடாரம் (உபா. 33:18), ஆகானின் கூடாரம் (யோசு. 7:24) என்று ஏராளமான கூடாரங்களைக் காணலாம்.
அவைகளின் மத்தியிலே கர்த்தர் யாக்கோபின் கூடாரத்தைப் பார்த்து, “யாக்கோபே உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!” (எண். 24:5) என்று மிகுந்த மனமகிழ்ச்சியோடு சொல்லுகிறார். வேதம் சொல்லுகிறது, “நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்” (சங். 118:15). யாக்கோபுக்கு கூடார வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தது ஆபிரகாம்தான். ஆபிரகாமோ, ஈசாக்கோ இந்தப் பூமியில் இருந்த நாட்களில் தங்களுக்கென்று வீடு ஒன்றையும் கட்டிக்கொள்ளவில்லை.
விசுவாசத்தினாலே ஆபிரகாம் வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்ததாக ஆபிரகாமைக்குறித்து வேதம் சொல்லுகிறது.
தேவபிள்ளைகளே, உங்களுடைய கூடாரம் எப்படிப்பட்டது? அது செம்மையானவர்களின் கூடாரமாகவும், நீதிமான்களுடைய கூடாரமாகவும் இருக்கிறதா?
நினைவிற்கு:- “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” (பிலி. 3:20).