Appam, Appam - Tamil

நவம்பர் 16 – வாய்க்காது!

“உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா. 54:17).

கர்த்தர் நம்முடைய பட்சத்தில் இருப்பதால் நமக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும். இது கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற உறுதியான வாக்குத்தத்தம். ஆயுதங்கள் உருவாக்கப்படாது என்று ஆண்டவர் சொல்லவில்லை. ஆயுதங்கள் உருவாக்கப்பட்டாலும், கொடிய அக்கினியாஸ்திரங்கள் வீசப்பட்டாலும் அவைகள் வாய்க்காது என்றே வாக்களிக்கிறார்!

ஒரு இடத்தில் பெரிய வெடி குண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். வெடித்துச் சிதறினால் பயங்கரமான ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடும். ஆனால் எதிர்பாராதவிதமாய் திடீரென்று மழை பொழிகிறது. வெடிகுண்டு நனைந்துபோனதால் செயலற்றுப்போகிறது. அந்த ஆயுதம் வாய்க்காமல் போகிறது.

எல்லா தேசங்களும் ஏராளமாக செலவிட்டு அதிக ஆயுதங்களை உருவாக்குகின்றன. ஒன்றுக்கொன்று கசப்பும், பகையும்கொண்டு ஏராளமாக ஆயுதங்களைத் தயாரிக்கிறார்கள். சதாம் உசேன் முதல் பல எதிரி நாட்டினரும் இஸ்ரவேலருக்கு விரோதமாய் எத்தனையோ ஏவுகணைகளை ஏவிக்கொண்டே இருந்தார்கள்.

ஆனால் இஸ்ரவேலரின் பக்கம் பலம் வாய்ந்த தடுப்பு ஏவுகணைகள் இயங்கியபடியால், அவை நடு ஆகாயத்தில் தீயவர்களுடைய ஏவுகணைகளைச் சந்தித்து முறித்து ஒன்றுமில்லாமல் செய்துவிட்டன. அந்த ஆயுதங்கள் வாய்க்காதே போயின! பறந்து காக்கிற பட்சியைப்போல கர்த்தர் இஸ்ரவேலர்மேல் ஆதரவாயிருந்தார். எந்த ஆயுதமும் வாய்க்காதே போனது.

வேதத்தில் ஒரு அருமையான சம்பவத்தை நாம் காணலாம். கர்த்தருடைய ஜனமாகிய யூதர்களை அழிக்க அகாஸ்வேருவின் மந்திரியான ஆமான் பெரிய திட்டங்களை எல்லாம் தீட்டினான். ஆயுதங்களை உருவாக்கினான். தன்னை மதித்து வணங்காத யூதனாகிய மொர்தெகாயை தூக்கில் போடுவதற்கு ஐம்பது முழ உயரமான விசேஷ தூக்குமரம் ஒன்றை தயாரித்தான். முடிவில் என்னவானது? கர்த்தருடைய கரம் குறுக்கிட்டது. எல்லாம் தலைகீழாய் மாறியது. மொர்தெகாயை தூக்கில் போடுவதற்காக ஆமான் எந்த தூக்கு மரத்தைச் செய்தானோ, அதே தூக்கு மரத்திலே ஆமான் தூக்கிலிடப்பட்டான்.

உங்களுக்கு விரோதமாய் யார் எழும்புகிறார்களோ, அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய் எழும்புகிறார்கள். உங்களுக்கு விரோதமாய் யார் சதி செய்கிறார்களோ அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய் சதி செய்கிறார்கள்.

தேவபிள்ளைகளே, இன்று உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை உங்களுடைய பிரச்சனை அல்ல. அந்த பிரச்சனையை கர்த்தர் தன்னுடைய பிரச்சனையாக எண்ணி உங்களுக்காக யுத்தம் செய்வார். உங்களுக்காக வழக்காடுவார். உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார். மீண்டும் அந்த வாக்குத்தத்தத்தை எழுதுகிறேன். “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்” (ஏசா. 54:17).

நினைவிற்கு:- “இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது” (எண். 23:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.