Appam, Appam - Tamil

நவம்பர் 12 – அனுமதிக்கப்பட்ட தேவசித்தம்!

“அப்படியல்ல ஆண்டவரே, … மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது; தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்” (ஆதி. 19:18,19).

கர்த்தர் ஒருமுறை பேசினதைத் திரும்பப் பெறுகிறவரும் அல்ல. மாற்றிப் பேசுகிறவரும் அல்ல. ஆகவே கர்த்தர் ஒருமுறை உங்களுக்கு ஒரு காரியத்தைச் செய்யும்படி சொன்ன பின்பும், ‘அப்படியல்ல ஆண்டவரே’ என்று அவரிடம் வாதாடாதிருங்கள். வேறு காரியத்தைச் செய்யும்படி அவருக்கு ஆலோசனை சொல்லாதிருங்கள். கர்த்தருடைய பரிபூரண சித்தத்தின் மையத்தில் இருப்பதுதான் உங்களுக்கு பெரிய ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.

சோதோம் கொமோரா பட்டணம் அழிக்கப்படுகிற நேரத்தில் கர்த்தர் லோத்துவிடம் பேசி, “உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்” (ஆதி. 19:17).

‘பின்னிட்டுப் பாராதே’ என்று கர்த்தர் சொன்னது லோத்துவின் மனைவிக்குப் பிடிக்கவில்லை. அவள் திரும்பிப் பார்த்து, உப்புத்தூணாய் மாறினாள். ‘மலைக்கு ஓடிப்போ’ என்று கர்த்தர் சொன்னது லோத்துக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்த சோவார் என்ற ஊருக்கு செல்வதையே லோத்து விரும்பினார். அந்த நேரம் அதை ஆண்டவர் அனுமதித்திருந்தாலும் அந்த இடம் லோத்துவுக்கு ஆசீர்வாதமானதாக இருக்கவில்லை.

கர்த்தருடைய பூரண சித்தமும் உண்டு. அனுமதிக்கப்பட்ட சித்தமும் உண்டு. கர்த்தருடைய பரிபூரணமான சித்தத்தில் இருக்கும்போது, சமாதானமும் சந்தோஷமும் இருக்கும். சில வேளைகளிலே நாம் அவருடைய பூரணமான சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்காமல், “அப்படியல்ல ஆண்டவரே”, என்று நம்முடைய விருப்பத்தை தேவனிடத்தில் வற்புறுத்திச் சொல்லுவோமானால், அந்தக் காரியத்தில் சமாதானமும், சந்தோஷமும் இருக்காது.

கர்த்தருடைய பரிபூரண சித்தம், இஸ்ரவேலர்கள் மன்னாவைப் புசித்து, காண்டமிருகத்தைப்போல பெலன்கொண்டு, கானானில் உள்ள முப்பத்தியொரு இராஜாக்களையும் ஜெயிக்கவேண்டும் என்பதாய் இருந்தது. ஆனால் இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய சித்தத்தையும் நோக்கத்தையும் புரிந்துகொள்ளாமல், கர்த்தர் கொடுத்த தேவதூதர்களின் உணவாகிய மன்னாவை அற்பமாய் எண்ணி, கொம்மட்டி காய்களையும், வெள்ளைப்பூண்டுகளையும், எகிப்தில் சாப்பிட்ட மச்சங்களையும் நினைத்து அழுதார்கள். இறைச்சியை விரும்பினார்கள். கர்த்தர் அவர்களுடைய மன விருப்பத்தின்படி இறைச்சியைக் கொடுத்தாலும், அதைப் பெருந்தீனியாய் இச்சித்துப் புசித்தவர்கள்மேல் கடுங்கோபம்கொண்டு அவர்களை அடித்தார்.

நினிவேக்கு போகும்படி கர்த்தர் யோனா தீர்க்கதரிசிக்குச் சொன்னார். ஆனால் யோனாவின் கண்கள் தர்ஷீசின்மேல் இருந்தது. ஒருவேளை யோனா கப்பல் துறைக்கு வந்தபோது, தர்ஷீசுக்குப் போக கப்பல் தயாராக நின்றிருக்கக்கூடும். ஆனால் அதில் பயணம் செய்தபோது, புயல் வீச ஆரம்பித்தது. கடல் கொந்தளித்தது. முடிவிலே யோனா மீனின் வயிற்றுக்குள் படாத பாடுபட்டு பின்னர் மனம்திரும்பினார்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு ஒன்றைச் சொல்லும்போது, மறுப்பு ஏதும் சொல்லாமல், தயக்கம் எதுவும் கொள்ளாமல் முழுவதுமாகக் கீழ்ப்படியுங்கள். ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்ள அதுவே வழி.

நினைவிற்கு:- “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?” (எண். 23:19).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.