Appam, Appam - Tamil

டிசம்பர் 13 – காத்திருக்கிறவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள்!

“பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் (சங். 37:9).

நீங்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்படியாக அழைக்கப்பட்டவர்கள். வேதம் சொல்லுகிறது, “உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரீகத்தைப் பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்” (தானி. 7:18).

சவுலுக்குப் பின்னால் தாவீது ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டபோதிலும் ராஜ்யபாரமோ அவருடைய கையிலே கிடைக்கவில்லை. ராஜாவான சவுல், தாவீதை காடுகளுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் துரத்தி வேட்டையாடும்படியாக விரட்டிக்கொண்டே இருந்தார். தாவீது ராஜ்யத்தை அடையும்படி எவ்வளவோ காலம் பொறுமையுடன் காத்திருக்கவேண்டியதாயிற்று. காத்திருந்த காலங்கள் வீணான காலங்கள் அல்ல. அந்தக் காலங்களில் அவர் ஆன்மீக ஜீவியத்திலே மிகவும் பெலனடைந்தார்.

ஒருநாள் வந்தது, சவுல் மரித்தபோது, தாவீது முதலில் யூதாவிலும், பின்பு முழு இஸ்ரவேலுக்கும் ராஜாவாக முடிசூட்டப்பட்டார். எந்தெந்த தேசங்களுக்கு அவர் படையெடுத்துச் சென்றாரோ அந்த தேசங்களையெல்லாம் வென்று, வெற்றி வாகைச்சூடி, அந்த தேசங்களையெல்லாம் சுதந்தரித்துக்கொண்டார்.

மலைப் பிரசங்கத்திலே இயேசுகிறிஸ்து சொன்னார், “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” (மத். 5:5). சாந்தகுணமுள்ளவர்கள் யார்? அவசரப்படாமல் பொறுமையோடு காத்திருப்பவர்கள்தான் சாந்தகுணமுள்ளவர்கள்.

ஒரு முறை நமது தேசப்பிதாவாகிய காந்தியடிகளிடம், ‘இந்தியாவின் சுதந்தரத்திற்காக சாத்வீகமான முறையையும், சத்தியாகிரகத்தையும் பயன்படுத்துகிறீர்களே, யுத்தமின்றி இரத்தம் சிந்துதலின்றி இந்தியா சுதந்திரம் பெற்றுக் கொள்ள முடியுமா’ என்று கேட்டார்கள்.

உடனே அவர் மத்தேயு 5:5ஐ மேற்கோள்காட்டி, ‘சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று வேதம் சொல்லுவதால் இந்தியாவின் சுதந்தரத்திற்காக நான் சாந்தகுணத்தையே பயன்படுத்துவேன்’ என்றார்.

ஆகவே, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு நித்தியஜீவனுக்கு ஏதுவாக “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக்காத்திருங்கள்” (யூதா 1:21). கர்த்தருடைய பாதத்தில் காத்திருக்கிறவர்களுக்கு நிச்சயமாகவே அவர் இரக்கம் பாராட்டுவார். நம்முடைய “கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார், என்றைக்கும் கோபங்கொண்டிரார்” (சங். 103:8,9).

தேவபிள்ளைகளே, கர்த்தருக்குக் காத்திருங்கள். கோபப்படாமல், அவசரப்படாமல், எரிச்சலடையாமல் கர்த்தர்மேல் உங்கள் பாரத்தை வைத்து பொறுமையுடன் காத்திருங்கள். நிச்சயமாகவே நீங்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவீர்கள்.

நினைவிற்கு:- “வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் (தானி. 7:27).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.