ஜூலை 19 – இளைஞன் எங்கே?
“இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன்” (ஆதி. 37:30).
காலம் செல்லச் செல்ல குழந்தைப் பருவம் மாறி இளமைப் பருவம் ஆரம்பமாகிறது. இளைஞர்கள் வாலிபர்களாக மாறி, வாலிபர்கள் புருஷர்களாகவும், புருஷர்கள் முதியவர்களாகவும் மாறுகிறார்கள். இப்பருவங்களிலேயே இனிமையான பருவம் இளமைப் பருவமே.
இளைஞர்களைத்தான் அரசாங்கம் முதல் அனைவரும் தேடுகிறார்கள். பல நேரங்களில் அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்த இளைஞர்களைத் தேடுகிறார்கள். சாத்தான் இளம்வயதிலேயே சிறுவர்களை தன் வலைக்குள் கொண்டுவந்து நாசம்பண்ண முற்படுகிறான்.
அவன் எப்படியெல்லாம் முயற்சிக்கிறான் பாருங்கள். இன்று பள்ளிகளுக்கு அருகிலேயே சில கயவர்கள் நின்றுகொண்டு மாணவர்களுக்கு போதை மருந்தை இலவசமாகத் தந்து அவற்றுக்கு அடிமையாகச் செய்கிறார்கள். தங்கள் வியாபாரம் செழித்துப் பலன் தரவேண்டும் என்பதே அவர்களது திட்டம். இதன் காரணமாகத்தான் இன்றைக்கு அநேகர் வாலிபப்பருவத்திற்குள் வருவதற்கு முன்பே போதைப் பொருளுக்கும், கஞ்சாவுக்கும், மதுபானத்திற்கும், சிகரெட்டுக்கும் அடிமையாகிவிடுகிறார்கள். இதைப் பார்த்து கர்த்தர் அங்கலாய்க்காமல் இருப்பாரோ? அவர் உள்ளம் பரிதபிக்காமல் இருக்குமோ?
யோசேப்பு இளைஞனாக இருந்தபோது, அவனுடைய சகோதரர்கள் அவனைப் பாழும்குழிக்குள் தூக்கிப்போட்டார்கள். பின்பு எகிப்திற்கு செல்லும் வர்த்தகரான மீதியானியரிடம் விற்றுப்போட்டார்கள். யோசேப்பின் மூத்த சகோதரனாகிய ரூபனுக்கு இது தெரியாதாகையால் குழிக்கு அருகிலே வந்து தன்னுடைய தம்பி அங்கே இல்லாததால் “இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன்” என்று புலம்பினான்.
கர்த்தர் இளைஞர்களை நேசிக்கிறார். வேதம் சொல்லுகிறது, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” (ஓசி. 11:1). அடிமைத்தனமான எகிப்திலிருந்து கர்த்தர் இளைஞர்களை மீட்க விரும்புகிறார். பொல்லாத பாவ பழக்கவழக்கமாகிய உலக சிநேகிதங்களிலிருந்து அவர்களைக் கர்த்தர் விடுவிக்க விரும்புகிறார்.
ஒரு இளைஞன் சந்திரரோகியாய் பிசாசின் பிடியில் அகப்பட்டபோது, தகப்பன் அந்த இளைஞனை கிறிஸ்துவண்டை அழைத்துக்கொண்டுவந்தான். “ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான் (மத். 17:15)” என்று கெஞ்சினான். இயேசு மனதுருகி பிசாசை அதட்டினபோது, உடனே அது அவனைவிட்டு புறப்பட்டுப் போயிற்று. அந்த நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்.
தேவபிள்ளைகளே, உங்கள் குடும்பத்தில் உள்ள இளைஞர்களை கர்த்தருக்கென்று அர்ப்பணியுங்கள். அவர்களை கிறிஸ்துவண்டை வழிநடத்துங்கள். அன்றைக்கு தன்னண்டை வந்த இளைஞர்களை அரவணைத்து ஆசீர்வதித்த தேவன், உங்கள் பிள்ளைகளையும் அரவணைத்து ஆசீர்வதிப்பார்.
நினைவிற்கு:- “எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டுபோவோம்; நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்” (யாத். 10:9).