Appam, Appam - Tamil

ஆகஸ்டு 12 – தேடுங்கள்!

“நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார் (சங். 34:4).

கர்த்தரைத் தேடும்போது வரும் ஆசீர்வாதங்கள் எண்ணற்றவை. நீங்கள் கர்த்தரைத் தேடமாட்டீர்களா என்று அவருடைய கண்கள் ஏக்கத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன. நீங்கள் அவரைத் தேடும்போது, நிச்சயமாகவே கண்டடைவீர்கள். தட்டும்போது திறக்கவும், கேட்கும்போது கொடுக்கவும், கர்த்தர் கிருபையில் ஐசுவரியமுள்ளவராய் இருக்கிறார். கர்த்தரை முழு இருதயத்தோடும் நீங்கள் தேடினால் நிச்சயமாகவே அவரைக் கண்டுபிடிக்க முடியும் (எரே. 29:13).

மீன் வயிற்றிலிருந்து யோனா கர்த்தரைத் தேடினார். கர்த்தர் அவருக்குச் செவிகொடுத்து, உயிர்ப்பிச்சை தந்து, கர்த்தருடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய கிருபை பாராட்டினார். தாவீது கெபியிலிருக்கும்போது, பண்ணின விண்ணப்பம் என்று 142-ம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறது.

ஒரு சிங்கமானது இரைதேடும்போது எப்படி ஒரு ஆக்ரோஷத்துடன் சிறிய மிருகங்களைத் தேடுகிறதோ, அதைவிட மோசமாய் சவுல் தாவீதை தேடிக்கொண்டிருந்தார். பிசாசானவனும் தாவீதுக்கு விரோதமாய் இருந்தான். அப்படி இருந்த சூழ்நிலையிலும் தாவீது தேவனைத் தேடினார். “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” (சங். 34:4) என்பதே அவருடைய சாட்சி.

கர்த்தரைத் தேடும்போது தாவீதுக்கு சிங்கத்தின் ஞாபகம் வரவே, “சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது” (சங். 34:10) என்று எழுதினார். பிரச்சனைகளை எண்ணி எண்ணி சோர்ந்துபோய் உட்கார்ந்துவிடாதிருங்கள். போராட்டங்களைக் கண்டு மலைத்து நின்றுவிடாதிருங்கள். அந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரைத் தேடுங்கள். உங்களுக்கு உதவி செய்யும்படி அவர் தீவிரித்து வருவார்.

ஒருவேளை வரவேண்டிய அநேக நன்மைகள் பல வருடங்களாக தடைபட்டுப்போயிருக்கலாம். பிள்ளைகளுடைய திருமண காரியங்கள் கைகூடி வராமலிருக்கலாம். அப்பொழுதெல்லாம் உபவாசம் இருந்து கர்த்தருடைய முகத்தைத் தேடுங்கள். உங்களில் என்ன குறைவு உண்டு, என்ன பாவம் உண்டு, எந்த மனிதர்மேல் கசப்பும் வைராக்கியமும் உண்டு என்பதையெல்லாம் ஆராய்ந்துபார்த்து தடைகளைத் தகர்த்தெறிந்து ஜெபியுங்கள். நிச்சயமாகவே கர்த்தர் உங்களுக்குச் செவிகொடுத்து நன்மையையும், ஆசீர்வாதத்தையும் தந்தருள்வார்.

அன்னாள் மலடியாய் இருந்து அவச்சொற்களைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கப் பிரியப்படவில்லை. கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்து கர்த்தரைத் தேடினாள். பொருத்தனையோடு இருதயத்தை ஊற்றி ஜெபித்தாள். கர்த்தர் அவளுக்கு உதவி செய்து ஆசீர்வாதமான சந்ததியை கிருபையாய்க் கொடுத்தார். உங்களுக்கும் அற்புதம் செய்வார்.

தேவபிள்ளைகளே, இனி நீங்கள் நிந்தையும் அவமானமும் அடையப்போவதில்லை. உங்களுடைய துயரத்தின் நாட்கள் முடிந்துபோகிறது.

நினைவிற்கு:- “நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்” (2 நாளா. 15:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6