அக்டோபர் 16 – மலைப்பிரசங்கத்தில் நீதி!
“நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” (மத். 5:6).
இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியத்தை ஆரம்பிக்கும்போது, வாயைத் திறந்து ஜனங்களுக்கு நீதியைக்குறித்தும், நியாயத்தைக்குறித்தும் பிரசங்கம்பண்ணினார். திரளான ஜனங்கள் அவருடைய வார்த்தையைக் கேட்டார்கள். மலைபிரசங்கத்தில்மட்டும் அவர் நான்குமுறை நீதியைக்குறித்து பிரசங்கித்திருப்பார் என்றால் நீதியும், நியாயமும் அவருடைய பார்வையிலே எவ்வளவு முக்கியமானவையாய் இருந்திருக்கின்றன! நீதியின்மேல் உங்களுக்கு ஆழ்ந்த பசிதாகம் இருக்கவேண்டியது அவசியம்.
பசியும், தாகமும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவை. பசியோடு உண்ணும்போது, அந்த உணவு அவனுக்குப் போஷாக்கையும், சக்தியையும், ஆரோக்கியத்தையும் கொண்டுவருகிறது. தாகத்துக்குத் தண்ணீர் குடிக்கும்போது, அந்தத் தண்ணீரானது மனிதனுடைய சரீர வெப்ப நிலைமையை சீர் செய்கிறது. உண்ட உணவு ஜீரணமாவதற்கும் உதவியாக இருக்கிறது.
ஒருவருக்கு பசி தாகம் இல்லையென்றால், ஏதோ வியாதி இருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படிப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியரிடம் சென்று சிகிச்சை பெற்றேயாகவேண்டும். சரீரத்திற்கு எப்படி பசியும், தாகமும் தேவையானவையோ அதுபோலவே ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நீதியின் மேல் பசி, தாகம் அவசியம். நீங்கள் நீதியின்மேல் பசி, தாகமாய் இருக்கும்போது, கர்த்தர் தம்முடைய நீதியை உங்களுக்குத் தரிப்பிப்பார். நீங்கள் திருப்தியடைவீர்கள்.
ஒரு ஆழமான சத்தியத்தை உறுதியாக உங்களுடைய உள்ளத்தில் பதித்துவிடுங்கள். நாம் ஆராதிக்கிற தேவன் நீதியிலே பிரியப்படுகிறவர். அவர் நூற்றுக்கு நூறு நீதியுள்ளவர். கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாய் இருக்கின்றன. நீதி என்பது என்ன? தேவனுக்கு முன்பாக உத்தமமாய் நடப்பதுதான் நீதி. மனச்சாட்சியின்படியும், வேத வசனங்களின்படியும் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதுதான் நீதி.
பழைய ஏற்பாட்டிலே இரண்டு விதங்களில் ஆபிரகாம் நீதியை சுதந்தரித்துக்கொண்டார். முதலாவது விசுவாசத்தினால் உண்டாகும் நீதியாகும். ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் (ஆதி. 15:6; ரோம. 4:3). இரண்டாவது, கிரியைகளினாலே அவர் நீதிமானானார். அப். யாக்கோபு எழுதுகிறார்: “நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?” (யாக். 2:21).
ஆனால் புதிய ஏற்பாட்டிலே, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் முதலாவது கிறிஸ்துவின் இரத்தத்தாலே நீதிமான்களாக்கப்படுகிறோம். “இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” (ரோம. 5:9). இரண்டாவதாக, கிறிஸ்துவைப் பற்றும் அறிவினாலே நீங்கள் நீதிமான்களாக்கப்படுகிறீர்கள் (ஏசா. 53:11) என்று வேதம் சொல்லுகிறது.
தேவபிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்துவின் நீதியிலே சார்ந்துகொள்ளும்போது, அவர் தமது நீதியின் வஸ்திரங்களை உடுத்தி, நீதியின் கிரீடத்தைத் தரித்து உங்களை நீதிமான்களாக்குகிறார்.
நினைவிற்கு:- “நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவ பக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு” (1 தீமோ. 6:11).