Appam, Appam - Tamil

அக்டோபர் 12 – நீதி நியாயங்களினிமித்தம்!

“உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்” (சங். 119:164).

கர்த்தருடைய நீதி நியாயங்கள் தாவீதை சந்தோஷப்படுத்தினதுடன் ஆச்சரியப்படவும் செய்தது. மட்டுமல்லாமல், ஒருநாளில் ஏழுதரம் துதிக்கும்படி அவரை ஏவி எழுப்பினது. நாம் கர்த்தருடைய நீதியை எண்ணித் துதிக்கும்போது, நிச்சயமாகவே அவர் தமது நீதியை நிலைநிறுத்துவார்.

நீதி, நியாயங்கள் நிமித்தம் ஏழுதரம் உம்மைத் துதிப்பேன் என்று தாவீது பொருத்தனை செய்கிறதைப் பாருங்கள். ஏழுதரம் என்பது பூரணத்தையும், முழு மனநிறைவையும், திருப்தியையும் காண்பிக்கிறது. நாகமான் குஷ்டரோகம் தீருவதற்கு ஓரிரு தரம் அல்லாமல் ஏழுதரம் யோர்தானில் மூழ்கினார். சூனேமியாளின் மகன் மரித்து, மீண்டும் உயிரோடு எழுந்தபோது, ஏழுமுறை தும்மி கண்களைத் திறந்தான். யாக்கோபு தன்னுடைய சகோதரனாகிய ஏசாவோடு சமாதானம் செய்து கொள்வதற்காக, “ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான்” (ஆதி. 33:3).

உங்களுடைய நீதி, நியாயங்கள் புரட்டப்படும்போது, நீதியுள்ள தேவனை ஒருநாளில் பலமுறை துதியுங்கள். ஏழெழுபதுமுறை துதியுங்கள். ‘நீதி செய்கிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்!’ என்று இடைவிடாமல் சொல்லுங்கள். கர்த்தர் நிச்சயமாகவே உங்களுக்கு நீதி நியாயம் செய்வார். மனுஷர் அநியாயமாய் தீமை செய்து உங்கள் நீதியைப் புரட்டலாம். கர்த்தரோ நீதியுள்ள நியாயாதிபதியாய் உங்களுக்காக வழக்காடி, நீதியை நிலைநிறுத்துவார்.

கர்த்தருடைய நீதி, நியாயங்களைக்குறித்துத் துதிக்கிற நீங்கள், நீதி நெறி தவறாதபடி உண்மையும் உத்தமமுமாய் ஜீவிக்கத் தீர்மானம்பண்ணுங்கள். “அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்” (யோவா. 16:8).

உங்களை நீதிமான்களாக மாற்றுவதில் கிறிஸ்துவுக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு. அவரை அறிகிற அறிவினாலே, நீதி உங்களுக்குள் வந்து வாசம்பண்ணும். கிறிஸ்துவின் நீதியை நீங்கள் சுதந்தரித்துக்கொள்வீர்கள். “என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்” (ஏசா. 53:11). நீங்கள் கிறிஸ்துவின் நீதியோடு இணைக்கப்படுங்கள்.

பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் நீதியை சார்ந்துகொள்ளும் மேன்மை இஸ்ரவேலருக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் பத்துக்கட்டளைகளாகிய நியாயப்பிரமாணத்தின் நீதியையே பற்றிக்கொண்டிருந்தார்கள். அந்த நீதி அவர்களைப் பூரணமாக்கவில்லை. இதனால் அவர்கள் சாபங்களையும், மனவேதனைகளையும் அடைந்தார்கள்.

புதிய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களாகிய நாம் எத்தனை பாக்கியவான்கள்! நாம் நம்முடைய சுயநீதியை நம்பி இருக்கவில்லை. பூரணப்படுத்த இயலாத சட்டதிட்டங்களை நம்பியிருக்கவில்லை. கிறிஸ்துவே உங்களுக்கு நீதியாய் இருக்கிறார். பாவம் அறியாத அவர் உங்களுக்காகப் பாவமானார். தமது நீதியின் வஸ்திரங்களை உங்களுக்கு உடுத்தி உங்களை நீதிமான்களாக்கியிருக்கிறார்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய ஓட்ட முடிவிலே நீதியின் கிரீடத்தைக் கர்த்தருடைய கையிலிருந்து பெற்றுக்கொள்வீர்கள்.

நினைவிற்கு:- “நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக” (உபா. 16:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.