Appam, Appam - Tamil

நவம்பர் 08 – ஆவியானவரின் சத்தம்!

“சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; …. வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” (யோவா. 16:13).

பல வேளைகளில் நம் வாழ்க்கையில் குறுக்குச்சந்துகளில் வழி தெரியாமல் நிற்கிறோம். பல வகையான பாதைகளுக்குள் ஒன்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. அந்தப் பாதைகளைப்பற்றிப் போதுமான அறிவு நமக்கில்லை. நம்முடைய ஞானமும் குறைவுபட்டது.

ஆனால் ஆவியானவரோ சகலவற்றையும் ஆராய்ந்து அறிந்திருக்கிறார். அவர் சகலவற்றையும் சரியாய் நிதானித்திருக்கிறவர். அவர் ஒருவரே நம்மைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்லுகிறவர். அவர் வழிநடத்தினால் நாம் ஒருபோதும் திசைமாறிச் செல்வதில்லை. கர்த்தருடைய வழிகள் நித்தியமான ஆசீர்வாதத்தை நம் வாழ்க்கையில் கொண்டுவந்துவிடும்.

பரிசுத்த ஆவியானவர் நம்மோடிருப்பதும், நமக்குள் தங்கியிருப்பதும் எத்தனை மேன்மையான காரியங்கள்! தொடர்ந்து வேதத்தை வாசித்துப்பாருங்கள். வழிநடத்தும் ஆவியானவர் பேசுகிற ஞானத்தையும்கூட தந்தருளுவார். “நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார்” (லூக். 12:12).

பேசவேண்டிய சரியான ஞானமுள்ள வார்த்தைகளை தக்க நேரத்தில் ஆவியானவர் உங்களுடைய நாவிலே தந்து சிறந்த கல்விமான்களைப்போல பேசும்படிச் செய்வார். அன்றைக்கு பேதுரு பேசின வார்த்தைகளைக்குறித்து எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். கல்வி அறிவு இல்லாத மீன் பிடித்துக்கொண்டிருந்த பேதுருவின் வார்த்தைகள் வேதத்தில் எவ்வளவு அதிகமாக இடம் பெற்றிருக்கிறது பாருங்கள். அவர் எழுதிய நிருபங்களை அப்படியே ஆவியானவர் வேதத்துடன் இணைத்து வைத்திருக்கிறார் அல்லவா?

பவுலையும், பர்னபாவையும் ஊழியப் பாதையில் ஆவியானவர் வெளிப்பாடுகளைக் கொடுத்து எத்தனை அருமையாய் வழி நடத்தினார்! (அப். 13:2). ஊழியத்தை ஆரம்பிக்க வழிநடத்தியவர், ஊழியத்தின் மத்தியபகுதியிலும், கடைசிவரையிலும் வழிநடத்தினாரே.

கர்த்தர் வழிநடத்தும்படி உங்களுடைய கைகளை மட்டுமல்ல, உங்களுடைய உள்ளத்தையும் அவரிடத்தில் கொடுத்துவிடுங்கள். அவரே ‘அல்பா’, அவரே ‘ஒமெகா’. விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவரும் அவர்தான். அவரிடத்திலே உங்களைப் பரிபூரணமாய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் எதற்கும் கலங்கவேண்டியதில்லை. கர்த்தர்மேல் முழு பாரத்தை வைத்துவிட்டு அவரில் இளைப்பாறுங்கள்.

பிலிப்பு சமாரியாவில் வல்லமையாய்ப் பயன்படுத்தப்பட்ட பின்பு ஆவியானவர் அவரிடம் “காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ” என்றார் (அப். 8:26). அப்படியே தெளிவான சத்தத்தோடும், தெளிவான திட்டங்களோடும், மெல்லிய குரல்மூலமாகவும், கர்த்தர் உங்களோடுகூட பேசுவார்.

தேவபிள்ளைகளே, வழிநடத்தும் வல்ல தேவன் வாழ்வின் நாயகன். அவரே நம் வாழ்வின் நாயகன்.

நினைவிற்கு:- “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும் போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசா. 30:21).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.