Appam, Appam - Tamil

நவம்பர் 06 – சொப்பனங்கள் தரிசனங்கள் மூலமாக!

“உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்” (யோவே. 2:28).

நம்மோடுகூட பேசுவதற்காகத்தான் சொப்பனங்களையும், தரிசனங்களையும் கர்த்தர் நமக்குக் கொடுக்கிறார். கர்த்தர் நம்மோடுகூட பேசவேண்டும் என்பதற்காக, இந்தக் கடைசி நாட்களில் மாம்சமான யாவர்மேலும் தம்முடைய ஆவியை ஊற்றிக்கொண்டேயிருக்கிறார். பரிசுத்த ஆவியினாலே பரலோகத்தையும் பூமியையும் இணைத்துக்கொண்டிருக்கிறார்.

பின்மாரி மழை நம் மத்தியிலே ஊற்றப்பட்டபடியினாலே நமக்குள்ளே தீர்க்கதரிசிகள் எழும்புகிறார்கள். சுவிசேஷகர்கள் எழும்புகிறார்கள். கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்கிறவர்கள் எழும்புகிறார்கள். மாத்திரமல்ல, நம்முடைய மூப்பர்கள் தரிசனங்கள் அடைகிறார்கள். வாலிபர்கள் சொப்பனங்களைக் காண்கிறார்கள்.

பழைய ஏற்பாட்டிலே யோசேப்பைக்குறித்து நாம் வாசிக்கும்போது யோசேப்பு ‘சொப்பனக்காரன்’ என்றே அழைக்கப்பட்டதைப் பார்க்கிறோம். சிறு வயதிலிருந்தே கர்த்தர் யோசேப்போடுகூட சொப்பனங்கள்மூலமாக உறவாடி, வருங்காலத்தை முன்னறிவிக்கிறவராய் அவரை உருவாக்கினார்.

சொப்பனங்களில் மூன்று வகை உண்டு. முதலாவது வகை சொப்பனம் காண்கிறவர்களுடைய வாழ்க்கையில் நிறைவேறும் சொப்பனங்கள். அதற்கு உதாரணமாக யோசேப்பின் சொப்பனங்களை நாம் கூறலாம். அவர் வாலிபப் பிராயத்தில் கண்ட சொப்பனங்களின் பெரும்பகுதி அவருக்குப் பிற்காலத்தில் எகிப்திலே உயர்த்தப்பட்ட நாளிலே நிறைவேறினது. கர்த்தர் முன்பாகவே சொப்பனங்களையும் தரிசனங்களையும் யோசேப்புக்குக் கொடுத்துவிட்டபடியினாலே, அவர் நடந்து சென்ற பாடுகளின் பாதையிலே சந்தோஷமாய் முன்னேறிச் செல்ல முடிந்தது.

இரண்டாவது, தானியேலின் தீர்க்கதரிசனங்கள், சொப்பனங்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு நிறைவேறக்கூடிய சொப்பனங்களாய் இருந்தன. இன்னும் நிறைவேற வேண்டிய பகுதிகள், அந்தச் சொப்பனங்களில் இருக்கின்றன. ஆயிரம் வருஷ அரசாட்சியைப் பற்றியும், நித்தியத்தைக்குறித்தும்கூட அவர் சொப்பனங்களின்மூலமாய் அறிந்தார்.

மூன்றாவது வகை சொப்பனம், அப்போது நடக்கிறவைகளை அப்பொழுதே பார்ப்பதாய் இருக்கிறது. உதாரணமாக, உலகின் எந்தப்பகுதியிலும் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் மற்றும் விண்கலங்களின் நிகழ்வுகளையும்கூட அப்பொழுதே இந்தியாவிலிருந்துகொண்டு தொலைக்காட்சியில் பார்ப்பதைப்போல அவ்வப்போது நடக்கிற சம்பவங்களை அப்படியே காணும்படி கர்த்தர் கிருபை செய்கிறார்.

சொப்பனம் என்பது ஒரு தெய்வீக மொழி. சில வேளைகளில் அந்த சொப்பனங்களை நாம் நேரிடையாகப் புரிந்துகொள்ளலாம். சிலவேளைகளில் அவை உவமைகளாக காணப்படுகின்றன. மறைபொருளாகவும் ஆண்டவர் அவற்றை வைத்திருக்கிறார்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களோடுகூட சொப்பனங்கள் மூலமாக பேசுவார். கர்த்தர் கொடுக்கிற சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் எல்லாவற்றிற்கும் ஆழமான அர்த்தங்கள் உண்டு. கர்த்தர் உங்களுக்கு அதை வெளிப்படுத்துவார்.

நினைவிற்கு:- “அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்” (எண். 12:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.