ஜூலை 31 – அதிசயங்களைத் தியானியுங்கள்!
“என் ஆவி என்னில் தியங்குகிறது, என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்” (சங். 143:4,5).
மேலே சொன்ன வசனத்தில் குறிப்பாக மூன்று வார்த்தைகளைக் கவனியுங்கள். நினைக்கிறேன், தியானிக்கிறேன், யோசிக்கிறேன் ஆகிய மூன்றே அவை. ஆம் அது தான் தியானத்தின் நல்ல முறை. முதலாவது பூர்வ நாட்களை நினையுங்கள். நீங்கள் முன்பு எளிமையாய் தாழ்ந்த நிலைமையில் இருந்ததை நினைக்கவேண்டியது உங்கள் கடமை. கர்த்தர் எவ்வளவு அன்போடு உங்களைத் தேடிவந்து தூக்கியெடுத்து தம்முடைய பிள்ளையாய் மாற்றினார் என்பதை மறவாதிருங்கள்.
நான் அடிக்கடி என் முற்காலத்தை சிந்தித்துப் பார்ப்பதுண்டு. ஒன்றாம் வகுப்பிலிருந்து எந்தெந்த ஆசிரியர்கள் எனக்கு பாடங்கள் கற்றுக்கொடுத்தார்கள் என்பதையும், சிறு வயதிலிருந்து எனக்குக் கிடைத்த நண்பர்கள் பற்றியும், அவர்கள் மத்தியிலே கர்த்தர் என்னை மேன்மையாய் உயர்த்தினதுபற்றியும் நினைக்க நினைக்க தேவ அன்பால் என் உள்ளம் பொங்குகிறது.
ஆம், அவருடைய செய்கைகளெல்லாம் தியானிப்பதற்கு அருமையானவை. அவருடைய கரங்களின் கிரியைகள் எத்தனை மகத்துவமானவை! அதோடு நின்று விடாதிருங்கள். சங்கீதக்காரர் சொல்லுகிறார், “அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப்பேசுங்கள்” (சங். 105:2).
கர்த்தருடைய செய்கைகளையெல்லாம் தியானித்துக்கொண்டிருந்த கிதியோனுடைய உள்ளத்தில், ‘முற்பிதாக்களைக்கொண்டு அரிய பெரிய காரியங்களைச் செய்த கர்த்தர் ஏன் இந்த நாட்களில் செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது. ஆகவே கிதியோன் தனக்கு தரிசனமான தேவதூதனைப் பார்த்து, “ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே?” என்று கேட்டார் (நியா. 6:13).
அந்த தியானத்தின் விளைவு என்ன? தனக்கு இருந்த அந்த பெலத்தோடு கர்த்தருக்காக எழுந்து புறப்பட்டார். முற்பிதாக்களோடு இருந்தவர் என்னோடும் இருக்கிறார் என்ற பெரிய விசுவாசம் உண்டானது. தேவபெலன் அவர்மேல் இறங்கி வந்தது. ஆகவே வெறும் முன்னூறு பேரைக்கொண்டு கடற்கரை மணலத்தனையான மீதியானியரை அவர் முறியடித்து ஜெயம் கொண்டார்.
“என்னுடைய ஊழியத்தின் வெற்றியின் இரகசியம் கல்வாரியின் தியானம்தான். மூன்று நாட்கள் சிலுவையையே நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்து, பின்பு போய் பிரசங்கிக்கும்போது, வல்லமையான அற்புதங்கள் நிகழுகிறதைப் பார்த்திருக்கிறேன்” என்று கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட வல்லமையான ஒரு ஊழியக்காரர் சொன்னார்.
தேவபிள்ளைகளே, கர்த்தரை எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் தியானிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு தனிப்பட்ட வாழ்க்கையிலே பரிசுத்தமடைவீர்கள். தேவனோடுகூட ஆழமான ஐக்கியம் கொள்ளுவீர்கள்.
நினைவிற்கு:- “இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்” (1 கொரி. 2:2).