ஜூலை 08 – சுரமண்டல சத்தம்!
“அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது” (வெளி. 14:2).
வேதத்திலுள்ள இசைக்கருவிகள் எல்லாவற்றிலும், சுரமண்டலம் என்னும் இசைக்கருவி மிக விசேஷமானது. இதுவே தாவீது இசைத்த முக்கியமான இசைக்கருவியாகும். “என் தேவனே, உம்மை சுரமண்டலத்தால் துதிப்பேன்” (சங். 43:4) என்று தாவீது சொன்னார்.
சுரமண்டலத்தை வாசிக்கும்போது, தேவனுடைய பிரசன்னம் அளவில்லாமல் இறங்கி வருவதை அவர் உணர்ந்தார். மட்டுமல்ல, சுரமண்டலத்தின்மூலமாக வெளிப்பாட்டு வரங்கள் அவர்மேல் இறங்கி வந்தன. கர்த்தர் சொன்னார். “என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்” (சங். 49:4). சுரமண்டலம் பூமிக்குரிய இசையாய் மட்டுமிராமல், பரலோகத்துக்குரிய இசையுமாயிருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் பரலோகத்துவாசிகள் மூன்றுமுறை சுரமண்டங்களை வாசித்து கர்த்தரைத் துதித்ததைப் பார்க்கலாம்.
சாமுவேல் தீர்க்கதரிசியின் நாட்களில், சுரமண்டல இசையோடு தீர்க்கதரிசன அபிஷேகமும் இணைந்திருந்தது. “நீ பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில், மேடையிலிருந்து இறங்கிவருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்கு எதிர்ப்படுவாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும் மேளமும் நாகசுரமும் சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்” (1 சாமு. 10:5) என்று இராஜாவாகப் போகிற சவுலிடம் சாமுவேல் தீர்க்கதரிசி சொன்னார்.
எலிசா தீர்க்கதரிசனம் உரைப்பதற்கு முன்பாக, ஒரு பரிசுத்த தெய்வீக இசையைக் கேட்க விரும்பினார். ஆகவே, ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டு வாருங்கள் என்று கேட்டார். சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது, கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி, அவன் தேவனுடைய வார்த்தையை ராஜாக்களுக்கு தீர்க்கதரிசனமாய் உரைத்தான் (2 இரா. 3:15).
ஒரு வல்லமையான, தீர்க்கதரிசன அபிஷேகம் பெற்ற, ஊழியக்காரி ஒருவர், மிக துல்லியமாக, தெளிவாக தீர்க்கதரிசனம் உரைப்பார். அப்படி தீர்க்கதரிசனம் உரைப்பதற்கு முன்பு, தேவனுடைய ஊழிக்காரர்கள் கர்த்தரைப் பாடித் துதித்து இசைக் கருவிகளை மீட்டுவார்கள்.
அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் இறங்குவார். எத்தனை ஆயிரம்பேர் வந்திருந்தாலும் பொறுமையாக அவ்வளவு பேருக்கும், தனித்தனியே அப்பெண் ஊழியர் தீர்க்கதரிசனம் உரைப்பார். படிப்பறிவில்லாத பேதமையான அந்த சகோதரியைக் கர்த்தர் பயன்படுத்தும் விதத்தைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
அதுபோல, இன்னுமொரு ஊழியக்காரர் பிரசங்கத்திற்கு முன்பு, தன்னுடைய அக்காடின் என்னும் இசைக்கருவியை எடுத்து அநேக பாடல்களை அபிஷேகத்தில் நிரம்பிப் பாடுவார். கர்த்தருடைய வல்லமை இறங்கும்போது, பிரசங்கிப்பார். அது தீர்க்கதரிசன வார்த்தைகளாக வெளிவரும். அநேகர் தன்னுடைய இருதயத்தை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து மனந்திரும்புவார்கள். தேவபிள்ளைகளே, கர்த்தரைப் போற்றித் துதித்துப் பாடுங்கள்.
நினைவிற்கு:- எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்” (சங். 150:3).