செப்டம்பர் 26 – இயேசுவோடு தேவன்!
“தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார்” (அப். 10:38).
நம்மைப்போல மாம்சமும் இரத்தமும் உடையவராய் மாறின தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடு பிதாவாகிய தேவன் எப்பொழுதும் கூடவே இருந்தார். அவருடைய பிரசன்னமும் அவருடைய சமுகமும் கூடவே இருந்தது. ஆகவே இயேசுகிறிஸ்து நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார். நீங்கள் பூமியிலே நன்மை செய்கிறவராக மற்றவர்களுக்கு ஆசீர்வாதமானவர்களாக இருக்கவேண்டுமானால், கர்த்தர் எப்பொழுதும் உங்களோடுகூட இருக்கவேண்டும். அவர் எப்பொழுதும் உங்களோடுகூட இருக்கிறாரா என்பதை நீங்கள் கட்டாயமாக உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
கர்த்தர் விலகினதை சிம்சோன் அறியாதிருந்தார் என்று வேதம் சொல்லுகிறது. உங்களைவிட்டு தேவனுடைய பிரசன்னமும், ஆவியானவரும் விலகிச்செல்லாதபடி எப்பொழுதும் கர்த்தருடைய பிரசன்னத்திலே உங்களை ஜாக்கிரதையோடு நிலைநிறுத்திக்கொள்ளுங்கள். சிம்சோன் வேசிகளின் பின்னால் சென்று தன்னுடைய பிரதிஷ்டையின் ஜீவியத்தைக் கெடுத்துப்போட்டதினால்தான் கர்த்தர் சிம்சோனைவிட்டு விலக வேண்டியதாயிற்று. எத்தனை பரிதாபம்!
இயேசு கிறிஸ்துவோடு பிதாவானவர் எப்பொழுதும்கூட இருந்தார். இளம் வயதிலேயே அவர் தேவ கிருபையில் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் என்று நாம் லூக். 2:52ல் வாசிக்கிறோம். தேவ பிரசன்னம் கூட இருந்தால் நாம் தேவகிருபையிலே விருத்தியடைவோம். நல்ல ஆண்டவர் கூட இருப்பதினால் நாமும் நன்மை செய்கிறவர்களாகவே சுற்றித் திரிவோம்.
தேவ பிரசன்னம் எப்பொழுதும் தம்மோடு இருக்கிறதை இயேசு உணர்ந்தார். “பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை” (யோவா. 8:29) என்று அவர் சொன்னார். நாம் மனுஷரை அல்ல, இனத்தவர்களை அல்ல, உறவினர்களை அல்ல, தேவனையே எப்பொழுதும் பிரியப்படுத்தும்படி நம்மை பூரணமாய் ஒப்புக்கொடுக்கும்போது கர்த்தருடைய பிரசன்னம் எப்பொழுதும் நம்மோடுகூடவே இருக்கும்.
இயேசு தன்னுடைய பன்னிரண்டாம் வயதிலே கர்த்தரைப் பிரியப்படுத்தி அவரோடுகூட இருக்க விரும்பினதை லூக்கா 2-ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். பஸ்கா பண்டிகையின்போது இயேசு எருசலேமில் இருந்துவிட்டார். அவரைக் காணாததினால் தாயாரும் யோசேப்பும் மறுபடியும் தேவாலயத்துக்கு வந்து அவரைத் தேடினார்கள். அப்பொழுது அவர் தேவாலயத்தில் போதகர் நடுவே உட்கார்ந்திருக்கிறதைக் கண்டார்கள்.
இயேசுகிறிஸ்துவினுடைய வாழ்க்கை முழுவதும் பிதாவை பிரியப்படுத்துவதும், அவருடைய சித்தத்தின்படி செய்வதும், பூமியிலே நன்மை செய்வதும், ஏழை மக்கள்மேல் மனதுருகுகிறதுமாகவே இருந்தது.
தேவபிள்ளைகளே, அவரே நம் எல்லோருக்கும் முன்மாதிரியானவர். அவரோடு பிதா இருந்தது போலவே, நம்மோடுகூடவும் அவர் இருப்பார்.
நினைவிற்கு:- “பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” (யோவா. 9:4).