செப்டம்பர் 22 – கற்பனைகளை கைக்கொள்ளும் இருதயம்!
“அவர்களும், அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, …. என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்” (உபா. 5:29).
காவல்துறை அதிகாரிகளும், நீதிமன்றங்களும், சிறைச்சாலைகளும் இருப்பதால் சட்டங்களை மீறி நடக்க உலகமனிதன் பயப்படுகிறான். உலகச் சட்டங்களுக்கே மனிதன் பயப்படுவானேயானால், பரலோக சட்டதிட்டங்களுக்கு, அவன் இன்னும் எவ்வளவு அதிகமாய் பயப்படவேண்டும்! கர்த்தருடைய கட்டளைகள், கற்பனைகள், நியமங்கள் அனைத்தையும் உங்கள் முழு இருதயத்தோடு கைக்கொள்ளும்படி தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
பாவம் என்றால் என்ன? கிரேக்க மொழியின்படி, அதன் அர்த்தம் குறி தவறுதலாகும். அம்பு நடுப்பகுதிக்கு எய்யப் பழகுகிறவர்கள் தூரத்தில் ஒரு வட்டத்தைப் போட்டு சரியாக அந்த வட்டத்தில் அம்பை எய்வார்கள். அது குறி தவறி வேறு எங்காவது போகுமென்றால், மீறுதல் என்னும் அர்த்தத்தில் அது மீறிச் சென்றுவிட்டது என்று சொல்லுவார்கள். நியாயப்பிரமாணத்தை மீறுதலும், மனசாட்சியை மீறுதலும், தேவனுடைய எதிர்பார்பை மீறுதலும் பாவங்களே.
கர்த்தர் பத்துக் கட்டளைகளை நியாயப்பிரமாணத்தில் கொடுத்திருக்கிறார். அதிலே நான்கு கட்டளைகள் மனிதன் கர்த்தருக்கு செய்யவேண்டிய கடமைகளைப் பேசுகின்றன. மற்ற ஆறு கட்டளைகள் மனிதர்களுக்கிடையே இருக்கவேண்டிய உறவுமுறைகளைக்குறித்துப் பேசுகின்றன.
நாற்பது நாட்கள் சீனாய் மலைமேல் உபவாசம் இருந்து, நியாயப் பிரமாணத்தின் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு வந்த மோசே, மலையடிவாரத்தில் இருந்த இஸ்ரவேல் ஜனங்கள் பொன் கன்றுகுட்டியை உருவாக்கி, அதற்கு முன்பாக நிர்வாணமாய் ஆடிப்பாடி, திருவிழா கொண்டாடிக் கொண்டிருந்ததைக் கண்டார். கோபம் கொண்ட மோசே அந்த இரண்டு கற்பலகைகளை மலையின் அடிவாரத்தில் போட்டு உடைத்துவிட்டார்.
ஒரு பக்கம் இஸ்ரவேலர்கள் மனசாட்சியை உடைத்தார்கள். மறுபக்கம் மோசே கற்பலகைகளை உடைத்தார். இன்றைக்கும் ஜனங்கள் சிற்றின்பங்களை விரும்பி தேவனோடு உள்ள உறவை உடைக்கிறார்கள். மனமும் மாம்சமும் விரும்பினபடி நடக்கிறதினால் கர்த்தருடைய இருதயம் உடைந்துபோகிறது.
மோசே மரிக்குமுன், உபாகமம் புத்தகத்தை தன் உயிலாகவும், மரண சாசனமாகவும் எழுதினார். “இஸ்ரவேலரே, நீங்கள் நன்றாயிருக்கவேண்டுமென்றால், கர்த்தருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” என்று அதில் ஆலோசனை கொடுத்தார். புதிய ஏற்பாட்டிலே கர்த்தர் நமக்கு, கற்பலகைகளின் பிரமாணத்தை அல்ல, ஆவியின் பிரமாணத்தைக் கொடுத்திருக்கிறார். “அந்த நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடேபண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்” (எபி. 8:10).
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய விரலைக் கொண்டு உங்களுடைய இருதயத்திலே எழுதப்பட்டிருக்கிற கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். நீங்களும் உங்களுடைய பிள்ளைகளும் ஆசீர்வாதமாயிருப்பீர்கள்.
நினைவிற்கு:- “அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை” (சங். 37:31).