Appam, Appam - Tamil

செப்டம்பர் 20 – முழு இருதயத்தோடு!

“கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் (2 நாளா. 15:12).

ஆசா என்ற இராஜா இஸ்ரவேலை அரசாண்டபோது, அங்கே கர்த்தரைத் தேடுவதிலே ஒரு பெரிய எழுப்புதல் உண்டானது. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும், தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடும்படி தீர்மானித்தார்கள். கர்த்தரைத் தேடாதவன் எவனோ, அவன் கொலை செய்யப்படவேண்டும் என்றும் உடன்படிக்கை செய்தார்கள் (2 நாளா. 15:13).

கர்த்தரைத் தேடும்போது, அரைகுறையாயும், ஏனோதானோ என்றும் அல்லாமல் முழு இருதயத்தோடு தேடவேண்டும் என்பதுதான் இராஜாவாகிய ஆசாவின் கட்டளை. ஆசா என்றால், மருத்துவ வைத்தியர் என்று அர்த்தம். அவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த ஒரே மருந்து “கர்த்தரை முழு இருதயத்தோடு தேட வேண்டும்” என்பதாகும். கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்கிறது (சங். 105:3).

உலகப்பிரகாரமான ஒரு மருத்துவரிடம் சென்றால், அவர், “இருதயம்தான் நம் உயிர்த்துடிப்பின் ஆதாரம். இருதயத்திலிருந்துதான் சரீரம் முழுவதற்கும் இரத்தம் செல்லுகிறது. எப்படி மோட்டார் பொருத்தப்பட்ட ஒரு பம்ப் கிணற்றிலிருந்து தண்ணீரை மேலே கொண்டுவருகிறதோ அதுபோல, சரீரத்தின் இரத்தத்தை இருதயம்தான் உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை கொண்டுசெல்லுகிறது” என்று சொல்லுவார். சில யோகாசன பயிற்சியாளர்கள், சிரசாசனம் என்று சொல்லி தலைகீழாய் நிற்கிறார்கள். அப்பொழுதுதான் தலைக்கு நன்றாக இரத்தம் பாய்ந்து வரும் என்றும், புத்துணர்ச்சி ஏற்படும் என்றும், சிந்தனை தெளிவாய் இருக்கும் என்றும் சொல்லுவதுண்டு.

ஆனால் வேதம் சொல்லும் இருதயமானது இரத்த ஓட்டத்தைக் கொண்டுவருகிற இருதயம் அல்ல. அது பாசமும், அன்பும் தங்கியிருக்கும் வாசஸ்தலம். கர்த்தரை முழு இருதயத்தோடு தேடவேண்டும் என்று சொல்லும்போது, அன்போடும், பாசத்தோடும், நேச வைராக்கியத்தோடும் தேட வேண்டும்.

ஆம், கர்த்தர் நம்முடைய மூளையிலோ, அறிவிலோ அல்லது சரீரத்தின் வேறு எந்த பகுதியிலோ தங்கியிருக்கவில்லை. முழு இருதயத்தோடு தம்மை நேசிக்கிற உள்ளத்தில் கர்த்தர் மகிழ்ச்சியோடு தங்கி, அந்த இருதயத்தை ஆலயமாக்குகிறார். அப்பொழுது அந்த இருதயம் மகா பரிசுத்த ஸ்தலமாய் விளங்கும்.

இராஜாவாகிய ஆசா தன் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடினபோது, கர்த்தர் அவருக்கு வெளிப்பட்டார் (2 நாளா. 15:4). ஆசா தேவனாகிய கர்த்தரைத் தேடினபோது, சுற்றிலுமிருந்த சத்துருக்களால் எந்தப் பிரச்சனையும் வரவில்லை. கர்த்தர் பரிபூரணமான இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் (2 நாளா. 14:7). உங்களுடைய வாழ்க்கையிலே பிரச்சனைகளும், போராட்டங்களும், சத்துருவின் எதிர்ப்புகளும் எதிர்ப்படும்போதும் முழு இருதயத்தோடு கர்த்தரைத் தேட தீர்மானியுங்கள்.

யோசபாத் இராஜா உபவாசத்தோடு கர்த்தரைத் தேடினார் (2 நாளா. 20:3). அதிகாலை வேளையிலே தாவீது கர்த்தரைத் தேடினார் (சங். 63:1). மகதலேனா மரியாள் கண்ணீரோடு கர்த்தரைத் தேடினாள் (யோவா. 20:1). தேவபிள்ளைகளே, நீங்களும் கர்த்தரை முழு இருதயத்தோடு தேடுங்கள். அப்பொழுது நிச்சயமாய்க் கண்டடைவீர்கள் (மத். 7:7).

நினைவிற்கு:- “நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டு விடுவார்” (2 நாளா. 15:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.