Appam, Appam - Tamil

செப்டம்பர் 16 – மகிமையின் நம்பிக்கை!

“கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம் (கொலோ. 1:27).

அப். பவுல் ஏறக்குறைய பதினெட்டு தேவ இரகசியங்களை தனது நிருபங்களில் எழுதியுள்ளார். “இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்” (1 கொரி. 4:1).

உங்களை ஊழியத்திற்கு அழைத்தவர் கிறிஸ்து. ஊழியத்தைக் கொடுத்தவர் கிறிஸ்து. உங்களைக்கொண்டு ஊழியத்தைச் செய்கிறவர் கிறிஸ்து. அவருக்காக ஊழியம் செய்கிறவர்களுக்கு அவர் தம்முடைய இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.

இரகசியம் என்பது எல்லாரும் அறியக்கூடிய ஒன்று அல்ல. அது குறிப்பிட்ட நபர்களுக்குமட்டும் சொல்லப்படும் அந்தரங்க செய்தியாகும். கர்த்தர் தமது இரகசியங்களை உலகத்தாருக்கு வெளிப்படுத்தாமல், தெரிந்துகொள்ளப்பட்ட தம்முடைய பிள்ளைகளுக்குமட்டும் வெளிப்படுத்துகிறார். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்குகூட வெளிப்படுத்தாத சில இரகசியங்களை புதிய ஏற்பாட்டில் கர்த்தர் தம் மணவாட்டி சபைக்கு வெளிப்படுத்துகிறார்.

தேவ இரகசியங்களில் முக்கியமான ஒன்று, வானாதிவானங்கள் கொள்ளாத தேவன் மனுஷருக்குள் வாசம்பண்ணுகிறார் என்பதாகும். இதை உலகத்தாரால் அறிந்துகொள்ளமுடியாது. “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவா. 1:14).

கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள்ளே வாசம்பண்ணும்போது ஆவியானவரும் நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார். “தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்” (1 பேது. 4:14). எனவேதான் “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?” (1 கொரி. 3:16) என்று வேதம் கேட்கிறது.

மட்டுமல்ல, தேவனுடைய வல்லமை, மகத்துவம், ஆவியின் வரங்கள், கனிகள் அனைத்தையுமே நாம் நமக்குள்ளே பெற்றிருக்கிறோம். “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” (2 கொரி. 4:7).

ஒருமுறை ஒரு சகோதரன் தன் மனைவியை கோபத்தில் அடித்துவிட்டார். அவர் அதை ஒரு குற்றமாக எண்ணவில்லை. ஆனால் கர்த்தரோ அவருடைய ஜெப நேரத்தில் “மகனே, நீ ஏன் என்னை அடித்தாய்? ஏன் என்னை வேதனைப்படுத்தினாய்? முள்ளில் உதைப்பது உனக்கு கடினமாம்” என்று பேசினார். அந்த சகோதரன் தன் தவறை மிகவும் ஆழமாய் உணர்த்தப்பட்டார்.

தேவபிள்ளைகளே, கிறிஸ்து உங்களுக்குள் இருப்பாரென்றால், கூடவே உங்களுக்கு மகிமையின் நம்பிக்கையும் இருக்கும். மகிமையின் நம்பிக்கை இருக்கும்போது, மகிமையின் எதிர்பார்ப்பும் உங்களுக்குள் வந்துவிடும்.

நினைவிற்கு:- “தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய்” (ரோம. 9:23).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.