செப்டம்பர் 14 – ராஜ்யமும் வல்லமையும்!
“எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே” (மத். 6:13).
கர்த்தருடைய ஜெபத்திலே, “ராஜ்யமும் வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே” என்று சொல்லி கர்த்தரை மகிமைப்படுத்தும்படி இயேசு கற்றுக்கொடுத்தார். ஆம், இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் ஒன்றோடொன்று இணைந்தவை. ஒரு இராஜா தன் இராஜ்யத்தை அருமையாய் அரசாளவேண்டுமானால் அவருக்கு வல்லமை தேவை. வல்லமையான படை வீரர்கள் இல்லாமல் அவரால் ராஜ்யத்தை சமாதானத்தோடு அரசாளவே முடியாது.
நம் ஆண்டவருடைய வல்லமை இயற்கை அனைத்தையும் உருவாக்கின ஒன்று மட்டுமல்லாமல், சகலவற்றையும் ஆளக்கூடிய இராஜரீக வல்லமையாகும். “வல்லமை தேவனுடையது” (சங். 62:11). கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, “நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு” என்று சொன்னார் (ஆதி. 17:1).
நீங்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிப்பார்த்து, கர்த்தாவே, நீர் வல்லமையுள்ளவர், சர்வவல்லமையுள்ளவர் என்று சொல்லித் துதியுங்கள். அப்பொழுது, சாத்தானுடைய வல்லமை தகர்ந்துபோகும். நீங்கள் எதற்கும் பயப்படமாட்டீர்கள். கர்த்தருடைய வல்லமையைச் சார்ந்துகொண்டு, சிங்கத்தைப்போல தைரியமுள்ளவர்களாக முன்னேறிச்செல்லுங்கள்.
கிறிஸ்துவைக்குறித்து ஏசாயா தீர்க்கதரிசி, அவர் “வல்லமையுள்ள தேவன்” என்று சொன்னார் (ஏசா. 9:6). நோய்களைக் குணமாக்குகிற வல்லமை அவருக்கு உண்டு. சாபத்தின் முதுகெலும்பை முறிக்கிற வல்லமை அவருக்கு உண்டு. பிசாசுகளைத் துரத்துகிற வல்லமை அவருக்கு உண்டு. மரித்தோரை எழுப்புகிற வல்லமை அவருக்கு உண்டு. அவர் தம்முடைய வல்லமையைக்கொண்டு இராஜரீகம் பண்ணுகிறார்.
அந்த சர்வவல்லவரை நோக்கிப்பாருங்கள், நீங்கள் நினைக்கிறதற்கும் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் மிக அதிகமாய் உங்களிலே செயலாற்ற அவர் வல்லமையுள்ளவர். அவரிடத்திலே ஒப்புக்கொடுத்ததை கடைசிவரையிலும் நிலைநிறுத்த வல்லமையுள்ளவர். நிச்சயமாய் அவர் இன்றைக்கு உங்களுக்கு ஒரு அற்புதம் செய்வார்.
ஆபிரகாமுடைய சரீரம் செத்துப்போன நிலைமையிலும் தனக்கு ஒரு சந்ததியை உண்டாக்க அவர் வல்லமையுள்ளவர் என்பதை விசுவாசித்தார். தன்னுடைய மகனை மோரியா மலையின் பலிபீடத்திலே கிடத்தினாலும், மரித்தோரிலிருந்து அவனை உயிரோடு எழுப்புவதற்கு அவர் வல்லமையுள்ளவர் என்று விசுவாசித்தார். அந்த சர்வவல்லவர்தான் வழுவாதபடி கடைசிவரை உங்களைப் பாதுகாக்க வல்லமையுள்ளவர். மிகுந்த மகிழ்ச்சியோடு உங்களை மாசற்றவர்களாய் பரலோகத்தில் நிலைநிறுத்த வல்லமையுள்ளவர்.
ஆகவே, கர்த்தருடைய வல்லமையை எப்போதும் சார்ந்துகொள்ளுங்கள். நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களை விடுவிக்க வல்லமையுள்ளவர், பாதுகாக்க வல்லமையுள்ளவர், முற்றும் முடிய வழி நடத்த வல்லமையுள்ளவர் என்று சொல்லி விசுவாச அறிக்கை செய்து வெற்றிநடை போடுங்கள்.
நினைவிற்கு:- “இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன், ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது” (லூக். 10:19).