செப்டம்பர் 07 – உயிர்ப்பிப்பார்!
“எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம்” (சங். 80:18).
“உயிர்ப்பியும் கர்த்தாவே” என்று தாவீது கண்ணீரோடு ஜெபிக்கிறதைப் பாருங்கள். ஆம், கர்த்தர் உயிர்ப்பிக்கிறவர். மற்றவர்கள் இவன் கடன் பிரச்சனையில் மூழ்கிப்போவான், அவனுடைய தொழில் வாடிப்போகும் என்றெல்லாம் எண்ணும்போது, கர்த்தர் அப்படிப்பட்டவர்களை அற்புதமாய் திரும்பவும் உயிர்ப்பிப்பார்.
உங்களுக்கு வியாதியா? பெலவீனப்பட்டுப் போனீர்களா? குடும்பத்திற்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யமுடியவில்லையா? கர்த்தர் உங்களை உயிர்ப்பிப்பார். வேதம் சொல்லுகிறது, “கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்” (ரோம. 8:11).
பெலவீன நேரங்களில் கர்த்தரை நோக்கிப் பார்த்து, “என்னை உயிர்ப்பியும் ஆண்டவரே” என்று கெஞ்சுங்கள். “அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ் செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்” (யாக். 5:15).
உயிருக்கு ஆபத்தான நிலைமையில் ஒரு வியாதியஸ்தன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகப்படும்போது, மரண கண்ணியிலிருந்து அவனை உயிர்ப்பிப்பதுதான் மருத்துவர்கள் செய்கிற முதல் காரியம். பின்பு உயிர்ப்பிக்கப்பட்ட அவன் நல்ல சுகத்தையும், பெலத்தையும் அடையவேண்டுமென்று சிகிச்சை செய்கிறார்கள். பரம வைத்தியராகிய கர்த்தர் என்ன செய்கிறார்? முதலாவது, ஜீவன் உண்டாயிருக்கவும், பின்பு அந்த ஜீவன் பரிபூரணப்படவும் கிருபை பாராட்டுகிறார் (யோவா. 10:10).
இன்றைக்கு ஒருவேளை நீங்களோ அல்லது உங்களுக்குப் பிரியமானவர்களோ வியாதிப்பட்டிருக்கலாம். உயிர்ப்பிக்கிற வல்லமையுள்ள கர்த்தரை நோக்கிப்பார்த்து, அவர்மேல் விசுவாசம் வைக்கும்போது, நிச்சயமாகவே அவருடைய வல்லமை உங்கள்மேல் இறங்கி வந்து பாதிக்கப்பட்டவரை உயிர்ப்பிக்கும். கர்த்தர் அல்லவா உங்களை சிருஷ்டித்தவர்? உங்களுடைய எலும்புகள், நரம்புகள், தசைநார்கள், இரத்த அணுக்களையெல்லாம் உண்டாக்கினவர் அவர்தானே! அவர் உங்களை உயிர்ப்பிக்கச்செய்வார்.
உங்களை உயிர்ப்பிப்பதற்காக தம்முடைய உயிரையே அவர் கொடுத்தார். தம் ஜீவனை பானபலியாக வார்த்தார். இரத்தக்கிரயம் செலுத்தி, உங்களுடைய சரீரத்தை மீட்டெடுத்திருக்கிறார். உங்களை குணமாக்க சரீரத்திலே தழும்புகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவர் உங்களை உயிர்ப்பியாமல் இருப்பாரோ? உங்களுடைய ஆயுள் நாட்களை நீட்டித்துத் தராமல் இருப்பாரோ? நிச்சயமாகவே அவர் அற்புதம் செய்வார்.
லாசரு மரித்துப் போனபோது, அவருடைய சகோதரிகளுக்கு கர்த்தர் உயிர்ப்பிப்பார் என்கிற விசுவாசமில்லை. லாசரு மரித்து நான்கு நாளாகிவிட்டதே, நாறுமே என்றாள் மார்த்தாள். நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று சொல்லி ‘லாசருவே வெளியே வா’ என்று இயேசு அதிகாரத்தோடே அழைத்தார். என்ன ஆச்சரியம்! லாசருவின் சரீரம் உயிரோடு எழுந்தது.
தேவபிள்ளைகளே, இந்த இயேசுகிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். அவரால் கூடாதகாரியம் ஒன்றுமில்லை.
நினைவிற்கு:- “நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” (எரே. 32:27).