ஆகஸ்டு 18 – தேடினேன்!
“இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை. நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்” (உன். 3:1,2).
இராக்காலம் என்பது மனிதனுக்கு தேவன் கொடுத்த மாபெரும் பரிசு ஆகும். இரவு நேரத்திலே தூங்கி இளைப்பாறுகிறோம். அப்பொழுது உள்ளத்தின் உளைச்சல்களும், கவலைகளும் வெகுவாக மறைந்துபோகின்றன. நன்கு ஓய்வு எடுத்துவிட்டு அதிகாலையில் எழும்பும்போது, புது பெலத்தோடும், உற்சாகத்தோடும் கர்த்தரைத் துதிப்பதற்கு அது உதவியாய் இருக்கிறது.
அதே நேரத்தில் சாத்தானும் இரவு நேரத்தைத் தன் தீய காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறான். களைகளை எண்ணங்களிலேயும், சிந்தனைகளிலேயும் விதைத்து ஆபாச சொப்பனங்களையும், கொடுமையான கனவுகளையும் கொண்டுவருகிறான். திருடர்களையும், கொள்ளைக்காரர்களையும் அந்த நேரத்தில் அனுப்பிவைக்கிறான்.
விஷ ஜந்துக்கள் தங்களுடைய விஷத்தை யார்மேல் இறக்குவது என்று அலைந்து திரிகிற நேரமும் இரவு நேரம்தான். ‘இரவில் உண்டாகும் பயங்கரம்’ (சங். 91:5) என்றும், ‘இருளில் நடமாடும் கொள்ளைநோய்’ (சங். 91:6) என்றும் வேதத்தில் வாசிக்கிறோமே!
நீங்கள் ஆத்தும நேசரோடு ஜெபத்திலே செலவழித்துவிட்டு இரவில் படுக்கைக்குச் செல்வீர்களென்றால், எந்தத் தீங்கும் அணுகாதபடி கர்த்தர் உங்களைப் பாதுகாப்பார். சத்துரு வெள்ளம்போல வரும்போது, ஆவியானவர் அவனுக்கு விரோதமாகக் கொடியேற்றுவார். தேவபிரசன்னத்தில் நித்திரை வரும்வரைக்கும் துதித்துக்கொண்டும், ஆவியிலே நிரம்பி அந்நியபாஷை பேசிக்கொண்டும் படுத்திருப்பது எத்தனை மகிமையான அனுபவம்!
மனிதனுடைய வாழ்க்கையிலே மூன்றில் ஒரு பகுதி தூக்கத்திலே கழிகிறது. சிலருக்கு அது வீணான நேரமாய் இருக்கும். அவர்கள் தூக்கமில்லாமல் மனதை அலட்டிக்கொண்டு பலவிதமான கவலைகளினால் நிம்மதி இல்லாமல் படுக்கையிலே உருண்டுகொண்டிருப்பார்கள். சிலரை கனநித்திரையின் ஆவி பிடித்து மரக்கட்டைபோல படுக்க வைத்திருக்கும். அவர்கள் தங்கள் ஆயுளில் மூன்றில் ஒரு பகுதியை வீணாக்குகிறார்கள்.
ஆனால் சூலமித்தி, “இராக்காலங்களிலே என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்” என்று சொல்கிறாள். கர்த்தரைத் தேடுவதற்கு இரவு நேரம், அருமையான ஒரு நேரமாகும். நம்முடைய துக்கத்தையும், மன வேதனைகளையும் ஆத்தும நேசரிடம் பகிர்ந்துகொண்டு, பரிகாரம் தேடும் நேரம் அது. கர்த்தர்மேல் நம் உள்ளத்தின் பாரச்சுமைகளையும், கவலைகளையும் இறக்கி வைத்து ஆறுதலும், தேறுதலும் பெறுகிற நேரம் அது.
“தேவனே பரலோக தரிசனத்தை எனக்குத் தாரும். இந்த இரவு நேரத்திலே உமது வழிகளை எனக்குப் போதியும். உம்முடைய சித்தத்தை எனக்கு தெரியப்படுத்தும்” என்று ஜெபிக்கும்போது, கர்த்தர் சொப்பனங்களிலும், தரிசனங்களிலும் பரலோகக் காட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பார். தேவபிள்ளைகளே, தேவன் தமது பிள்ளைகளாகிய உங்களுக்கு தமது சித்தத்தையும், வருங்காலத்தையும் நிச்சயமாய் முன்னறிவிப்பார்.
நினைவிற்கு:- “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” (ஆமோ. 3:7).