ஆகஸ்டு 16 – இருதயத்தைக் கொடுங்கள்!
“என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக” (நீதி. 23:26).
கர்த்தர் மனிதனுக்காகவே, சகலவற்றையும் சிருஷ்டித்தார். சூரியன், சந்திரன், நட்சத்திரங்களெல்லாம் தேவன் மனிதனுக்குக் கொடுத்த பெரிய ஈவுகளாகும். மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகள், மரங்கள், செடிகள் ஆகியவை அவருடைய அன்பளிப்புகளே. விதவிதமான உணவு வகைகளையும், சீதோஷ்ண நிலைமைகளையும் அவர் மனிதனுக்கு இரக்கமாக ஏற்படுத்திக் கொடுத்தார். அவன் பூமியிலே வாழ அருமையான சரீரத்தையும், அறிவு உலகத்தோடு தொடர்புகொள்ள ஆத்துமாவையும், பரலோகத்தோடு ஐக்கியம்கொள்ள ஆவியையும் கொடுத்தார்.
மனிதன் பாவம் செய்தபோது, பாவத்தை நீக்க தம்முடைய இரத்தத்தையே கொடுத்தார். சரீரமெல்லாம் பிட்க ஒப்புக்கொடுத்தார். நோய்களைக் குணமாக்கச் சித்தமானார். அன்பைக் கொடுத்தார், சமாதானத்தைக் கொடுத்தார், சந்தோஷத்தைக் கொடுத்தார். சிலுவையிலே தம்மைத்தாமே கொடுத்தார். எல்லாவற்றையும் கொடுத்த அவர், ஒன்றை மட்டுமே, நம்மிடத்திலே கேட்கிறார். அதுதான் நம்முடைய இருதயம்.
நம்முடைய முழு இருதயத்தையும் அவருக்குக் கொடுக்கும்போது, சந்தோஷமாக அவர் வந்து நம்முடைய இருதயத்தை தம்முடைய ஆலயமாய் மாற்றி, உள்ளே வாசம்பண்ணுவார். நம்முடைய தேவனாய் இருப்பார். நாம் அவருடைய ஜனங்களாய் இருப்போம்.
ஜனங்கள் தங்களுடைய இருதயத்தைக் கர்த்தருக்குக் கொடுக்காமல், உதட்டளவில் ஆராதனை செய்துகொண்டு பெயரளவில் கிறிஸ்தவர்களாய் இருப்பது எத்தனை துக்கமான ஒரு காரியம்! “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது” (ஏசா. 29:13) என்று இயேசுகிறிஸ்து மனமுடைந்து சொல்லுகிறார்.
நீங்கள் உங்கள் இருதயத்தை கர்த்தருக்குக் கொடுத்தால், அவர் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி, பரிசுத்தப்படுத்துவார். வேதம் சொல்லுகிறது, “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” (மத். 5:8).
கர்த்தர் உங்களுக்கு சுகத்தையும், பெலனையும், ஞானத்தையும் தந்திருக்கிறதினால் நீங்கள் உங்கள் வருமானத்தில் தசமபாகத்தை அவருக்குக் காணிக்கையாகத் தரவேண்டியவர்களாக உள்ளீர்கள். அப்படி நீங்கள் மனப்பூர்வமாய்க் கொடுக்கும்போது கர்த்தர் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்களை ஆசீர்வதிப்பார் (மல். 3:10) என்றும், ஆயிரமடங்கு உங்களை ஆசீர்வதிப்பார் (உபா. 1:11) என்றும் வேதம் சொல்லுகிறது.
தசமபாக காணிக்கை மட்டுமல்லாமல், உங்களுடைய நேரத்தையும் கர்த்தருக்குக் கொடுங்கள். இருபத்தினான்கு மணி நேரத்தை அவர் உங்களுக்குக் கொடுத்திருக்க ஒரு மணி நேரமாவது நீங்கள் அவரோடு விழித்திருக்கவேண்டாமா? அவரை நேசிக்கவும், துதிக்கவும், பாடவும், மகிமைப்படுத்தவும், ஊழியம் செய்யவும் உங்கள் நேரத்தை அவருக்குக் கொடுங்கள்.
நினைவிற்கு:- “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக். 6:38).