Appam, Appam - Tamil

ஆகஸ்டு 06 – களிகூருகிறது!

“என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது (1 சாமு. 2:1).

இங்கே அன்னாளின் களிகூருதலைக் காண்கிறோம். தன் விண்ணப்பத்திற்கு கர்த்தர் செவிசாய்த்து ஆசீர்வாதமான சாமுவேலைத் தந்தபோது, அன்னாள் நன்றியோடு, “இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்” என்று சொல்லித் துதித்தாள் (1 சாமு. 1:27).

தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட அன்னாளால் அவளது உள்ளத்தின் மகிழ்ச்சியை அடக்கிக்கொள்ளமுடியவில்லை. 1 சாமு. 2-ம் அதிகாரத்தின் முதல் வசனத்தில் ‘அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி’ என்று ஆரம்பமாகிறது. 10-ம் வசனம், ‘என்று துதித்தாள்’ என்று முடிகிறது. ஆகவே இந்த வேதபகுதியில் அன்னாளின் ஜெபத்தையும், விண்ணப்பத்தையும், கர்த்தரைத் துதிக்கும் துதியையும் காண்கிறோம். கூடவே அன்னாளின் களிகூருதலையும் பார்க்கிறோம்.

நீங்கள் உங்களுடைய இருதயத்தை கர்த்தருடைய பாதத்தில் ஊற்றி உண்மையாய் விண்ணப்பம் செய்வீர்களென்றால், இனியும் நீங்கள் துக்கமுகமாய் இருக்கப் போவதில்லை. கர்த்தர் நிச்சயமாகவே உங்கள் கண்ணீரைத் துடைப்பார். களிகூருதலின் நாட்களை உங்களுக்குத் தந்தருளுவார். முதலாவது அன்னாளின் உள்ளத்தில் களிகூருதலை ஏற்படுத்தியது கர்த்தருடைய பரிசுத்தமே. கர்த்தரைப்போல பரிசுத்தமுள்ளவர் இல்லை. உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை (1 சாமு. 2:2).

உலகத்தில் எத்தனையோ தத்துவ ஞானிகளும், மதஸ்தாபகர்களும், முனிவர்களும், ரிஷிகளும், தங்களைத் தாங்களே தெய்வம் என்று அழைத்துக்கொள்ளும் அவதாரங்களும் உண்டு. ஆனால் அவர்களுடைய பரிசுத்தத்தை கர்த்தருடைய மகா மகிமையான பரிசுத்தத்தோடு இம்மியும் ஒப்பிடமுடியாது. அவர் பரிசுத்தராய் இருக்கிறது மட்டுமல்ல, தம்முடைய பிள்ளைகளுக்குப் பரிசுத்தத்தைத் தரவும் செய்கிறார். அவர்மட்டும் பரிசுத்தராய் இருந்து, உங்களுக்கு அந்தப் பரிசுத்தத்தைக் கொடுக்காவிட்டால், அவருடைய பரிசுத்த அழகிலே உங்களுக்கு என்ன பயன் உண்டு? “நான் பரிசுத்தராய் இருக்கிறதுபோல, நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்” என்று சொல்லுகிற ஆண்டவர் தம்முடைய பரிசுத்தத்தை உங்களுக்குத் தந்தருளுகிறார்.

கர்த்தருடைய இனிமையான சுபாவமே தம் பிள்ளைகளுக்கு மனதாரக் கொடுப்பதுதான். கொடுப்பதற்கு அவரிடத்தில் வல்லமையும், கிருபையும், தயவும் இருக்கிறது. பரிசுத்தத்தைக் கொடுக்கிறதினாலேயே அவருடைய நாமம் “யேகோவா மெக்கதீஸ்” என்பதாயிருக்கிறது.

அன்னாள் கர்த்தருடைய பரிசுத்த அழகைப் பார்த்தாள். முதலாவது, களிகூர்ந்த அவள், இரண்டாவதாக ஆராதிக்க ஆரம்பித்துவிட்டாள். தேவனே, உம்மைப்போல ஒருவரும் இல்லை. எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை (1 சாமு. 2:2) என்று துதித்து, ஆராதனையின் உச்சத்திற்குச் சென்றாள்.

நீங்கள் கர்த்தருடைய பரிசுத்த அழகைப் பார்க்கும்போது, கர்த்தரைத் துதியுங்கள் என்று உங்களுக்கு யாரும் கற்றுக்கொடுக்கவோ, வற்புறுத்தவோ வேண்டியதில்லை. உங்களுடைய உள்ளம் தானாகவே கர்த்தரைத் துதிக்கும்படி பொங்கும். ஏவி எழுப்பும். தேவபிள்ளைகளே, ஆண்டவரை ஆராதித்து, துதித்து, பரிசுத்தத்தின் படிகளிலே மென்மேலும் ஏறி உன்னதங்களுக்குச் செல்லுங்கள்.

நினைவிற்கு:- “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது” (லூக். 1:46,47).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6