ஆகஸ்டு 05 – கர்த்தரின் தளபதி!
“நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்” (யோசு. 5:14).
“கர்த்தருடைய தளபதிகள்” என்ற தலைப்பிலே ஒருவர் ஒரு வீடியோவை தயாரித்திருந்தார். கர்த்தருக்காக வல்லமையாகப் பயன்பட்ட தேவனுடைய ஒருசில ஊழியக்காரர்களைப்பற்றியும், அவர்கள் திரளாய் ஆத்துமாக்களை ஆதாயம்பண்ணினதின் இரகசியங்களைப்பற்றியும் அதில் அவர் தெரிவித்திருந்தார். அதன்மூலமாக அநேக தேவஇரகசியங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது.
ஆம், கர்த்தர் உங்களைப் பார்க்கும்போது, யுத்த வீரனாகப் பார்க்கிறார். கர்த்தருடைய தளபதியாகப் பார்க்கிறார். நீங்கள் கர்த்தருக்காக யுத்தம் செய்யப் புறப்படும்போது, முழு பரலோகத்திலுள்ள தேவதூதர்களும் சேனைசேனையாக உங்கள் பட்சத்தில் நிற்கிறார்கள். பலமிக்க தேவதூதர்களை கர்த்தர் உங்களுக்குப் பணிவிடை ஆவிகளாய்க் கொடுக்கிறார் (எபி. 1:14).
ஒரு வட்டாட்சியர் எதையும் ஆய்வு செய்வதெற்கென போகும்போது, கூடவே அவருடைய கடைநிலை ஊழியர்கள் இரண்டு பேர் உடன் வருவார்கள். அதேநேரம் கோட்டாட்சியர் அவ்வாறு சென்றார் என்றால், ஐம்பதுபேர் உடன் வருவார்கள். ஒரு அமைச்சர் சென்றால், ஐநூறுபேர் வரக்கூடும். இப்படி ஒவ்வொருவருடைய அந்தஸ்துக்கும் ஏற்ற எண்ணிக்கையில் அவர்களைப் பாதுகாக்கவும், அவர்கள் சொல்லும் பணியை நிறைவேற்றவும் உதவியாளர்கள் உடன் வருவார்கள்.
ரோம சாம்ராஜ்யத்திலே நூற்றுக்கதிபதிகளை அதன் அரசாங்கம் நியமித்திருந்தது. அவர்களின் கீழே நூறு யுத்த வீரர்கள், நூற்றுக்கதிபதிகள் சொல்லும் கட்டளையை நிறைவேற்ற ஆயத்தமாய் இருப்பார்கள். அதுபோல, ஒரு சேனைத்தளபதியின் கீழே ஆறாயிரம் போர்வீரர்கள் இருப்பார்கள். இப்படி பலவிதமான அதிகாரங்களும், ஆளுகைகளும் உண்டு.
அதைப்போலவே, சாத்தானுக்கென்றும் ஒரு சேனை இருக்கிறது. ஒரு மந்திரவாதி நூறு பிசாசுகளைக் கையிலே வைத்து ஏவல் செய்யும்போது, தன்னையும் ஒரு நூற்றுக்கதிபதியைப்போல எண்ணிக்கொள்ளுகிறான்.
இவர்கள் கிறிஸ்தவ மார்க்கத்திற்கு விரோதமாகவும், ஊழியக்காரர்களுடைய உடல்நலத்திற்கு விரோதமாகவும், குடும்பங்கள் உடையும்படியாகவும் சாத்தானிடம் விண்ணப்பிக்கிறார்கள். சூழ்நிலை அவ்வாறிருக்கும்போது கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய நாம் எவ்வளவு அதிகமாய் கர்த்தருக்காக நின்று யுத்தம் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம்!
கர்த்தர் உங்களைத் தமது தளபதியாகப் பார்க்கிறார். சாத்தானுக்கு விரோதமாக யுத்தம் செய்வதற்கு அவர் தம்முடைய இரத்தத்தையே உங்களுடைய கையிலே கொடுத்திருக்கிறார். ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினாலும் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயிக்க உங்களால் முடியும் (வெளி. 12:11).
யுத்த ஆயுதமாக இயேசுவின் நாமத்தை உங்களுக்குத் தந்திருக்கிறார். வசனமாகிய ஆவியின் பட்டயத்தை கையிலே ஏந்திக்கொள்ளுங்கள். கர்த்தரைத் துதிக்கிற துதியும், ஊக்கமான ஜெபமும் தேவனுடைய சர்வாயுதவர்க்கங்களாய் இருக்கின்றன. அவற்றை வல்லமையாய்ப் பயன்படுத்துங்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் யுத்த வீரர்களாயும், நூற்றுக்கதிபதிகளாயும், கர்த்தருடைய தளபதிகளாயும் இருக்கிறீர்கள்.
நினைவிற்கு:- “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” (2 கொரி. 10:4).