Appam, Appam - Tamil

அக்டோபர் 29 – காத்துக்கொள்ளுங்கள்!

“ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே” (வெளி. 14:4).

சீயோன் மலையிலே ஆட்டுக்குட்டியானவரோடு நிற்கும் ஒரு திரள் கூட்டத்தைக்குறித்து அப்.யோவான் எழுதும்போது, ‘அவர்கள் கற்புள்ளவர்கள். ஸ்திரீகளால் கறைபடாதவர்கள்’ என்று எழுதுகிறார். இதில் ஸ்திரீகளால் கறைபடாதவர்கள் என்று பன்மையிலே குறிப்பிடப்படுகிறார். ஒருவனும் தன்னுடைய மனைவியினால் கறைபடமாட்டான். ஆனால் மனைவி இருக்க, பல ஸ்திரீகளோடு ஐக்கியம் வைத்துக்கொள்ளுகிறவன், நிச்சயமாய்க் கறைபட்டவன். ஆவிக்குரிய ஜீவியத்திலே பரிசுத்தத்தையும், குடும்ப வாழ்க்கையில் கற்பையும் கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

கர்த்தர் சிருஷ்டிப்பிலே மனிதனை ஆணும், பெண்ணுமாக சிருஷ்டித்தார். குடும்ப வாழ்க்கையைக் கர்த்தர்தாமே ஏற்படுத்தினார். மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை உண்டாக்குவேன் என்று கர்த்தர்தாமே ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்ற துணையை உண்டாக்குகிறார். “புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” (ஆதி. 2:24).

இயேசுகிறிஸ்து இந்த பூமியிலிருந்தபோது, அநேக ஸ்திரீகள் அவரிடத்திலிருந்து ஊழியம் செய்தார்கள். மார்த்தாள், மரியாள் வீட்டுக்குப்போனார். மகதலேனா மரியாளைச் சந்தித்தார். சமாரியப்பெண்ணை சத்தியத்திற்குள் வழிநடத்தினார். ஆனால் அவர் எந்தவிதத்திலும் தம்முடைய பரிசுத்தத்தில் குறைவுபடவில்லை. ஸ்திரீகளால் கறைபடவுமில்லை. “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?” (யோவா. 8:46) என்று அவர் சவாலாக கேட்டார்.

இயேசுகிறிஸ்து பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து, தூய்மையான அடிச்சுவடுகளைப் பின்வைத்துப்போனார். “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று” (மத். 5:27, 28) என்று அவர் சொன்னார்.

ஸ்திரீகளால் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளக்கூடாது என்பதில் பழைய ஏற்பாட்டுப் பக்தனாகிய யோபு மிகவும் அக்கறையுள்ளவராய் இருந்தார். தன் கண்களை பிரதிஷ்டைபண்ணி பரிசுத்தத்திற்கென்று அர்ப்பணித்திருந்தார். “என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” (யோபு 31:1) என்றார்.

ஸ்திரீகள் என்ற வார்த்தை விக்கிரக ஆராதனையையும் குறிக்கிறது. இஸ்ரவேல் ஜனங்கள் விக்கிரக ஆராதனைக்குள் போனபோது, “ஐயோ வேசித்தனத்திற்குள் போனாயே” என்று கர்த்தர் புலம்பினார். இன்னும் கறைப்படுத்துகிற ஸ்திரீகள் என்பது, உலகநேசத்தையும் உலகஅன்பையும் காண்பிக்கின்றது. கிறிஸ்துவினுடைய இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள் கறைதிரையற்ற மாசற்ற மணவாட்டியாகக் காணப்படவேண்டும். பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி வேசித்தனமும் மற்ற எந்த அசுத்தமும், பொருளாசையுமாகிய இவைகளின் பேர் முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவும் கூடாது. ஆகவே ஆவிக்குரிய கற்பைக் காத்துக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்” (2 கொரி. 11:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.