Appam, Appam - Tamil

அக்டோபர் 14 – நீதிமொழிகள்!

“இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்” (நீதி. 1:2,3).

உலக ஞானிகளிலேயே சிறந்த ஞானியாக விளங்கினவர் சாலொமோன். இளம்வயதிலேயே அவருக்குக் கொடுக்கப்பட்ட பெரிய ராஜரீக பொறுப்பையும், அதைத் தான் நிறைவேற்றக்கூடாத தகுதியின்மையையும் அவர் உணர்ந்தவராக இருந்தார்.

ஆகவே, தேவனுடைய ஜனங்களை நியாயம் விசாரிப்பதற்கும், நீதி செய்வதற்கும் தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்டார். “உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும்” (1 இரா. 3:9) என்றார்.

“சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால், உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை” (1 இரா. 3:10-12) என்றார்.

நீதி, நியாயம், நியாயத்தீர்ப்புமேல் அக்கறைகொண்ட ஆண்டவர், அதற்காகவே சாலொமோனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். உங்களுடைய வாழ்க்கையிலும்கூட நீதி நியாயம் செய்ய உங்கள் மனதைத் திருப்பும்போது, கர்த்தர் உங்களுக்கு ஞானத்தைத் தருவார். அப்படியானால் நீதியும், நியாயமும் எவ்வளவு முக்கியமானவை! சாலொமோன் எழுதின புத்தகத்திற்கு “ஞானமொழிகள்” என்ற பெயர் வைக்கப்படவில்லை. “நீதிமொழிகள்” என்றே பெயர் வைத்தார். அதிலே நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப் பற்றிய உபதேசத்தைக் காணலாம் (நீதி. 1:3).

சாலொமோனைக் கர்த்தர் நீதி நியாயங்களை அறிகிற அறிவினால் நிரப்பியிருந்தபடியால், “அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து” (1 இரா. 4:32). “மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப் போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்” (பிர. 12:9).

பிற்காலத்தில் வந்த யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் சாலொமோன் உரைத்த நீதிமொழிகளைப் பேர்த்தெழுதினார்கள் (நீதி. 25:1). காலாகாலமாக இந்த தேவவசனங்கள், கர்த்தருடைய நீதி நியாயங்களை அறிவித்துக்கொண்டே இருக்கின்றன.

வேத வாக்கியங்களின்படி ஒருவன் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்போது, அவன் நீதிமானாக விளங்குவதுடன் ஞானவானாகவும், பரிசுத்தவானாகவும்கூட விளங்குவான். வேதம் சொல்லுகிறது, அவன் “நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான்” (நீதி. 1:6).

நினைவிற்கு:- “நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்” (ஏசா. 32:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.