Appam, Appam - Tamil

அக்டோபர் 08 – தூக்கணாங்குருவி!

“ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்” (மத். 6:26).

முதன்முதலில் நான் ஒரு தூக்கணாங்குருவியின் கூட்டைப் பார்த்ததும், அந்தக் குருவிகள் கூடு கட்டுகிற விதத்தைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டுப்போனேன். பரலோகத்தில் என் கூட்டை சீரும் சிறப்புமாக கட்டவேண்டுமே என்று உணர்த்தப்பட்டேன்.

தூக்கணாங்குருவிகளை இந்தியா, இந்தோனேஷியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் காணலாம். அவைகள் கூடுகளைத் தங்கள் அலகினாலும், கால்களினாலும் மிகத் துரிதமாகக் கட்டுகின்றன. இதற்காக நார்கள், புற்கள், இலைகள் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றன. அவை தரையிலிருந்து சற்று உயரமாகவே தங்கள் கூட்டைக் கட்டுகின்றன.

தங்களுடைய குஞ்சுகளின்மேலும், அவைகளின் பாதுகாப்பின்மேலும் இவை அதிக அக்கறையுள்ளவைகளாக இருக்கின்றன. பார்ப்பதற்கு இந்தக் கூடுகள் தலைகீழாய் தொங்குவதுபோல காட்சியளித்தாலும், உள்ளே தூக்கணாங்குருவியின் குஞ்சுகளுக்கென்று தனி அறையை வைத்திருக்கின்றன.

சில வகை தூக்கணாங்குருவிகள் மிகவும் ஐக்கியம் உள்ளவை. ஒரு குருவி கூடு கட்ட ஆரம்பிக்கும்போது, மற்ற குருவிகளும் சேர்ந்து வந்து, எல்லாவிதத்திலும் அதற்கு உதவி செய்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரே மாதத்தில் நூற்றுக்கணக்கான குருவிக் கூடுகளைக் காணலாம். அவை சமுதாயப் பறவைகளாக மாலை நேரங்களில் ஒன்றாகக் கூடி பாடி மகிழ்கின்றன. தேவனுடைய பிள்ளைகள் இயற்கையை ரசித்து, இந்த தூக்கணாங்குருவிகளைப் பார்த்து, கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறார்கள்.

சில தேசங்களிலுள்ள தூக்கணாங்குருவி வகைகளில் ஆண் குருவிகள் மூன்று நான்கு கூடுகளைக் கட்டி தன் துணையான பெண் குருவிக்குக் காட்டும். எந்த கூடு அந்த பெண் குருவிக்குப் பிடித்திருக்கிறதோ, அதிலேயே அவைகள் குடும்பம் நடத்தி முட்டையிட்டு, குஞ்சு பொறிக்கும். தொடர்ந்து, மற்ற கூடுகளை கலைத்து விடும்.

தூக்கணாங்குருவிகளுக்கு மிக அழகாக கூடு கட்டும் அறிவைத் தந்தது நம்முடைய தேவனாகிய கர்த்தரே. “சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது” (யோபு 12:10).

இந்த தூக்கணாங்குருவிகளுக்கு விரோதமாக எதிரிகள் வரும்போது, இவைகளெல்லாம் ஒன்றாய் சேர்ந்து எதிரியை விரட்டியடிக்கின்றன. பாம்புகள் ஏறி வரும்போது ஒன்றுபோல குரலெழுப்பி பாம்பைத் தடுக்க எல்லா வழி முறைகளையும் பயன்படுத்தி, தங்கள் முட்டைகளையும் குஞ்சுகளையும் பாதுகாத்துக்கொள்ளுகின்றன. அவைகளுக்கு இருக்கும் அன்பும், ஐக்கியமும், ஒருமனப்பாடும் கிறிஸ்தவர்களுக்கே ஒரு சவாலாக விளங்குகின்றன.

தேவபிள்ளைகளே, பட்சிகளும், பறவைகளும் தங்களுடைய குஞ்சுகளைப் பாதுகாத்து அவற்றுக்கு ஆதரவாய் இருப்பதைப்போல, கர்த்தரும் தம்முடைய செட்டைகளை விரித்து, நம்மை மீட்டுப் பாதுகாக்கிறார். எல்லாத் தீங்கிற்கும் விலக்கிப் பாதுகாக்கிறார். பகலில் பறக்கும் அம்பானாலும், இரவில் நடமாடும் கொள்ளைநோயானாலும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரமானாலும், கர்த்தர் தமது சிறகுகளாலே மூடி, கண்மணிபோல நம்மைப் பாதுகாக்கிறார்.

நினைவிற்கு:- “பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்” (ஏசா. 31:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.